பருப்பு பொடி அனைத்து வகையான பருப்புகளையும் வறுத்து அரைத்து செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி ஆகும். இந்த பருப்பு பொடியை சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அத்தனை சுவையாக இருக்கும். மேலும் உடலுக்கும் ஆரோக்கியமானது. இந்த பருப்பு பொடியை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இந்த சுவை நிறைந்த சத்தான பருப்பு பொடியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
எளிமையா செய்யலாம் செட்டிநாட்டு ஸ்டைலில் அருமையான பரங்கிக்காய் புளிக்கறி!
பருப்பு பொடி செய்வதற்கு பருப்பை வறுக்கும் முறை மிகவும் முக்கியம். எப்பொழுதும் குறைவான தீயில் வைத்து ஒவ்வொரு பருப்பையும் பொறுமையாக வறுக்க வேண்டும். பருப்பு நல்ல சிவந்து மொறுமொறுப்பு தன்மை வரும் வரை வறுக்க வேண்டும். பருப்பு நன்கு வறுபடாவிட்டால் பருப்பு பொடி விரைவிலேயே கெட்டி தன்மை அடைந்து விடும்.
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து 4 மேஜை கரண்டி அளவு கடலை பருப்பை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தனியாக ஒரு தட்டில் கொட்டி வைத்து விடலாம் இப்பொழுது அதே கடாயில் 4 மேஜை கரண்டி அளவிற்கு துவரம் பருப்பை சேர்த்து அதையும் நன்கு வறுக்கவும். துவரம் பருப்பு ஓரளவு வறுபடும் பொழுதே அதனுடன் 2 மேஜை கரண்டி உளுத்தம் பருப்பு, 13 காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதனை தனியாக வைத்து விடலாம்.
இப்பொழுது கடாயில் அரை ஸ்பூன் அளவு நெய் சேர்த்து அந்த நெய்யில் இடித்த 10 பல் பூண்டை சேர்த்து அந்த பூண்டையும் நிறம் மாறும் வரை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து 4 மேஜை கரண்டி அளவிற்கு பாசிப்பருப்பை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு இந்த பொடிக்கு மேலும் சுவை தரும். இறுதியாக பொட்டுக்கடலை மூன்று மேஜை கரண்டி சேர்த்து அதையும் நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது வறுத்து எடுத்த அத்தனை பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நல்ல பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் அரைத்து எடுத்த பிறகு இதனை ஒரு சல்லடை கொண்டு சலித்து காற்று புகாதவாறு இறுக்க மூடிவைத்து விடவும்.
இட்லி, தோசைக்கு மாவு அரைத்த உடனேயே புளிக்க வைக்க அட்டகாசமான டிப்ஸ்!
அவ்வளவுதான் சுவையான பருப்பு பொடி தயாராகிவிட்டது!