எளிமையா செய்யலாம் செட்டிநாட்டு ஸ்டைலில் அருமையான பரங்கிக்காய் புளிக்கறி!

செட்டிநாட்டு பகுதிகளில் முக்கிய நிகழ்வு மற்றும் விருந்துகளில் கட்டாயம் இடம் பிடிக்கும் ஒரு உணவுதான் பரங்கிக்காய் புளிக்கறி. பரங்கிக்காயை வைத்து செய்யும் இந்த புளிக்கறியானது புளிப்பு சுவை அட்டகாசமாக இருக்கும். அனைத்து வகையான குழம்பு வகைகளுக்கும் இந்த பரங்கிக்காய் புளிக்கறி பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும். கோவில் பூசைகள், படைப்புகளில் பாரம்பரியமாக செய்யப்படும் இந்த செட்டிநாட்டு பரங்கிக்காய் புளிக் கறியை எப்படி சுலபமாக நாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

பரங்கிக்காய் புளி கறி செய்வதற்கு நன்கு முற்றிய பரங்கிக்காயை ஒரு கீற்று எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பரங்கிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கப் அளவு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு பழுத்த தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு எலுமிச்சை அளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பை ஊறவைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

மீனே இல்லாத மீன் வறுவல்… வாழைக்காய் வைத்து அருமையான சைவ மீன் வறுவல்!

ஒரு கடாயில் மூன்று குழி கரண்டி எண்ணெயை காய வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் வெந்தயம், கால் ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். இவை நன்கு வதங்கியதும் பெரிய துண்டுகளாக நறுக்கிய பரங்கிக்காயை கழுவி இதில் சேர்த்து வதக்க வேண்டும்.

அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள், ஐந்து ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் புளி மற்றும் உப்பு கரைசலை சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். நன்றாக கொதித்து வெந்து கெட்டியாக வரும் பொழுது அச்சு வெல்லம் ஒன்றை தட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆறு பல் பூண்டை தோலோடு தட்டி இதனுடன் சேர்க்க வேண்டும். இப்பொழுது எண்ணெய் பிரிந்து கெட்டியானதும் இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் செட்டிநாட்டின் பாரம்பரிய உணவான பரங்கிக்காய் புளிக்கறி தயாராகிவிட்டது.

Exit mobile version