ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பெரிய நெல்லிக்காய் வைத்து ஊறுகாய்!

பெரிய நெல்லிக்காயில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக ஒரு நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வரும் பட்சத்தில் ரத்தம் அதிகரிக்கும், மேலும் தலை முடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் பெரிய முக்கியத்துவம் வகிக்கிறது. இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை தினமும் நாம் உணவில் சேர்க்க வேண்டியது கட்டாயம். பெரிய நெல்லிக்காய் வைத்து காரசாரமான நொடியில் செய்யக்கூடிய ஊறுகாய் ரெசிபி இதோ…

ஊறுகாய் செய்வதற்கு தேவையான நெல்லிக்காய்களை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கழுவி சுத்தம் செய்த நெல்லிக்காயை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து அந்த நெல்லிக்காயை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் சேர்த்து விட வேண்டும். நெல்லிக்காயின் சூடு ஆறியதும் நெல்லிக்காயின் மீது சிறிய அழுத்தம் கொடுத்து அதன் உள் இருக்கும் விதைப்பகுதியை நீக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கடாயில் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இரும்பு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும். அதன் பின் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பெரிய நெல்லிக்காயை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

காரசாரமான நல்லாம்பட்டி ஸ்பெஷல் சோயா வறுவல்!

மசாலாக்கள் நெல்லிக்காயில் முழுவதுமாக சேரும் அளவிற்கு நன்கு கலந்து கொடுத்து வதக்க வேண்டும். இந்த நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.
இறுதியாக நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் கடுகு வெந்தய பொடி சேர்த்து கலந்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பின் அரை தேக்கரண்டி நாட்டு சக்கரை சேர்த்து கலந்து இறக்கினால் காரசாரமான இன்ஸ்டன்ட் பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.

இந்த ஊறுகாயை அனைத்து விதமான கலவை சாதம், சாம்பார் ரசம், மோர் என குழம்பு வகைக்கும் சிறந்த பொருத்தமாக இருக்கும். மேலும் இந்த ஊறுகாயை சப்பாத்தி, பழைய சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

Exit mobile version