பாட்டியின் அதே கைப்பக்குவத்தில் ஆட்டுக்கால் சூப் குழம்பு! ரகசிய ரெசிபி இதோ….

கிராமங்களில் மட்டுமே தனி சுவையுடன் ஆட்டுக்கறி ரெசிபிகள் செய்வது வழக்கமான ஒன்றுதான். அதிலும் ஆட்டுக்கால் வைத்து அவ்வப்பொழுது சூப் தயார் செய்தாலும் அதில் குழம்பு செய்வது பக்குவமான விஷயம். இந்த முறை பாட்டியின் அதே கைப்பக்குவத்தில் சுவை மாறாத ஆட்டுக்கால் சூப் குழம்பு நம் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..

ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், சிறிதளவு புதினா இலைகள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் ஆட்டுக்கால்களை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கல்லுப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். குறைந்தது 10 விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளலாம்.

இந்த நேரத்தில் குழம்பிற்கு தேவையான மற்ற பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். இந்த ஆட்டுக்கால் சூப் குழம்பு செய்வதற்கு சின்ன வெங்காயத்தை பயன்படுத்த வேண்டும். குறைந்தது 250 கிராம் அளவுள்ள சின்ன வெங்காயம் தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 250 கிராம் அளவுள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை, கைப்பிடி அளவு புதினா இலைகள் மற்றும் மல்லி இலைகள், சிறிய துண்டு இஞ்சி, 10 பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு 3 தக்காளி பழங்கள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

தக்காளி நன்கு மசிந்து வரும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு சிறிய துண்டு பட்டை, 3 கிராம்பு, இரண்டு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம்.

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தேங்காய் பால் சேர்த்து முட்டை கிரேவி! ரெசிபி இதோ…

இப்பொழுது நாம் வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆரம்பித்து அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வதக்கி அரைத்த விழுதுகளை ஆட்டுக்கால் வேக வைத்திருக்கும் குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் கூடுதலாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மீண்டும் ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு அரை தேக்கரண்டி, மூன்று காய்ந்த வத்தல், ஒரு கொத்து கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி பழம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த தாளிப்பு குழம்பு தயாரானதும் குழம்பினுள் சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் ஒருமுறை கலந்து கொடுத்து குழம்பு ஒருமுறை கொதிக்க வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் சூப் குழம்பு தயார்.