உப்புமா பலருக்கு பிடிக்காத ரெசிபியாக இருந்தாலும் இதை விரும்பி சாப்பிடும் தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. சூடான உப்புமா அதனுடன் தேங்காய் சட்னி அல்லது சர்க்கரை வைத்து சாப்பிடும் பொழுது இதமான ஒரு உணர்வை மனதிற்கு கொடுக்கும். மேலும் இந்த உப்புமா எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம். தினமும் ஒரே மாதிரியாக உப்புமா செய்யாமல் இந்த முறை சற்று வித்தியாசமாக பத்தே நிமிடத்தில் சுவையான அரிசி உப்புமா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
வீட்டில் சமையலுக்காக பயன்படுத்தும் அரிசி இரண்டு டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு கழுவி ஒரு முறை சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் தேவையான அளவு உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் பொழுது தண்ணீர் சற்று கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக அகலமான கடாயில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். அதில் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக 15 முதல் 20 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் அரிசி மாவு சேர்த்த பிறகு கைவிடாமல் கிளற வேண்டும்.
ஐந்து நிமிடத்திலேயே அரிசி மாவில் உள்ள தண்ணீர் வற்றி இறுக்கி கட்டியாக வர துவங்கும். இந்த நேரத்தில் மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் ஒருமுறை உதிர்த்துவிட்டு கிளறிக்கொடுத்து மீண்டும் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
இப்படி இரண்டு அல்லது மூன்று முறை செய்யும் பொழுது அரிசி நன்கு வெந்து உதிரி உதிரியாக உப்புமா பதத்திற்கு வந்து விடும். இந்த நேரத்தில் தாராளமாக ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி கொடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான அரிசி உப்புமா தயார்.