நம் வீடுகளில் உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மாவுச்சத்து நிறைந்த இந்த உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் உணவு வகைகளில் ஒன்று. இந்த உருளைக்கிழங்கு வைத்து குழந்தைகளுக்கு பிடித்தமான குருமா செய்யும் ரெசிபியை பார்க்கலாம். இந்த ரெசிபி 15 நிமிடங்களில் செய்யும் அளவுக்கு மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு- 250 கிராம்
தக்காளி- 2 அல்லது 3
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி
வத்தல் பொடி – ஒன்று அரை தேக்கரண்டி
மல்லி பொடி – இரண்டு தேக்கரண்டி
மட்டன் மசாலா – இரண்டு தேக்கரண்டி
கறி மசாலா – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை பழம் – பாதி அளவு
மல்லி புதினா இலை- கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 2
கசகசா – சிறிதளவு
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் தக்காளி அதனுடன் மல்லி புதினா இலை, பட்டை, கிராம்பு, மிளகாய், கசகசா, பெருஞ்சீரகம் இவற்றை மையாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். அதில் தாளிப்பிற்காக பெருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் நறுக்கிய வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக மாற வேண்டிய தேவை இல்லை. அதன் பின் நம் பச்சையாக அரைத்து வைத்திருக்கும் தக்காளி, மல்லி, புதினா, பட்டை, கிராம்பு, விழுதுகளை சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பச்சை வாசனை செல்லும் வரை நன்கு எண்ணெயுடன் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் குக்கரில் இஞ்சி பூண்டு விழுதுகளை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள மசாலா வகைகளை சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும்.
இந்த கலவையில் பாதி எலுமிச்சை பல சாறுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின் மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை அடுத்து இறுதியாக உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி சுத்தம் செய்து இந்த கலவையினுள் சேர்த்து நன்கு கலர வேண்டும்.
பச்சையான உருளைக்கிழங்கின் மீது மசாலாக்கள் நன்கு சேரும்படி தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கிளற வேண்டும். அதன் பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவிட வேண்டும். மூன்று விசில்கள் வரும் வரை காத்திருக்கவும்.
அதன் பின் நாம் திறந்து பார்க்கும் பொழுது நமக்கு சுவையான உருளைக்கிழங்கு குருமா தயாராக இருக்கும். அதன் மேல் மல்லி புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்கு வேக வைக்காமல் எளிமையான முறையில் குறைந்த நேரத்தில் இந்த குருமாவை சமைத்து விடலாம். இது சப்பாத்தி, பரோட்டா, தோசை, இட்லி, சாதம் என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.