ஹெல்த்தியான சட்னி சாப்பிட வேண்டுமா? வாங்க முருங்கைக்கீரை சட்னி ட்ரை பண்ணலாம்!

தினமும் இட்லி மற்றும் தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என ஒரே மாதிரியாக வைக்காமல் சற்று வித்தியாசமான முறையில் அசத்தலான சுவையில் சட்னி செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் ஆசையாக விரும்பி சாப்பிடுவார்கள். இரும்புச்சத்து பல நிறைந்த முருங்கை கீரை வைத்து சட்னி செய்யலாம் வாங்க.

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பருப்பு பொன்னிறமாக மாறியதும் அரை தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி மிளகு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

அதன்பின் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த வத்தல், பாதி எலுமிச்சம் பழ அளவு புலி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் வதக்கும்பொழுது வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்து விடும்.

அதன் பின் இரண்டு கைப்பிடி அளவு கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். இதமான தீயில் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வரை முருங்கைக்கீரையை வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து கூட கீரையை வேக வைத்துக் கொள்ளலாம். முருங்கை கீரையை வேக வைக்கும் பொழுது மூடி போடக்கூடாது.

கொத்து பரோட்டா சாப்பிட முடியாத நேரங்களில் வீட்டிலேயே எளிமையான சப்பாத்தி கொத்து செய்யலாம் வாங்க!

முருங்கைக்கீரை நன்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். அதன் பின் இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு, கால் கப் தேங்காய் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது முருங்கைக்கீரை சட்னி தயார்.

இந்த சட்னிக்கு எண்ணெய் கடுகு கருவேப்பிலை கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கலந்தால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.