அசைவ பிரியர்களுக்கு மட்டன் என்றாலே ஒரு தனி விருப்பம் தான். மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி என எது வைத்தாலும் சுவை அருமையாக இருக்கும். மட்டன் குழம்பு சுவையாக வருவதற்கு வெங்காயம், தக்காளி மிகவும் அவசியம். ஆனால் சற்று மாறுதலாக வெங்காயம் தக்காளி இல்லாமல் மட்டன் வைத்து சூப்பரான வருவல் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
மட்டன் – அரை கிலோ
காஷ்மீரி மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி
மல்லித்தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா பொடி – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை- அனைத்திலும் இரண்டு
பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை- கைப்பிடி அளவு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டிகள்
செய்முறை
ஒரு குக்கரில் நன்கு கழுவி சுத்தம் செய்த அரை கிலோ மட்டன், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து 5 விசில்கள் வரும் வரை வேகவைக்கவும்.
அதே நேரத்தில் மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதன் பின் இரண்டு பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். நாம் குக்கரில் வேக வைத்திருக்கும் மட்டன் இறைச்சி இதில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இப்பொழுது தேவையான அளவு சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
பத்து முதல் 15 நிமிடங்கள் மிதமான தீயில் இந்த மட்டன் கலவையை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வற்றும் போது சுவையான மட்டன் வருவல் தயார். இறுதியாக வாசனைக்காக மல்லி இலைகள் தூவி பரிமாறலாம்.