வெங்காயம், தக்காளி என எதுவும் இல்லாமல் பெங்காலி ஸ்டைல் கடலைப்பருப்பு சப்ஜி!

சமையலில் தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு தனி இடம் தான். இந்த இரண்டு பொருட்களும் இல்லாமல் பெரும்பாலான குழம்பு வகைகளை சமைக்க முடியாது. அப்படி இருக்க வெங்காயம், தக்காளி என இரண்டும் சேர்க்காமல் பெங்காலி ஸ்டைல் கடலை பருப்பு சப்ஜி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ

ஒரு குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு பட்டை, , இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நான்கு காய்ந்த வத்தல், ஒரு சிறிய துண்டு இஞ்சி நன்கு இடித்து சேர்த்துக் கொள்ளவும்.

இஞ்சியை எண்ணெயுடன் சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுத்து கொள்ளவும். அடுத்ததாக ஒரு நான்கு உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தொலி உரித்து பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை எண்ணெயுடன் சேர்த்து வதக்க வேண்டும். அதே நேரத்தில் அரை மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பை இரு முறை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது குக்கரில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனியாத்தூள், கால் தேக்கரண்டி சீரகப்பொடி, அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி கறி மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.

kadalaii

அடுத்ததாக ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய தேங்காய், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை நன்கு மூடி நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் அழுத்தம் குறைந்தபின் திறந்து பார்க்கும் பொழுது உருளைக்கிழங்கு மற்றும் கடலைப்பருப்பு நன்கு வெந்து இருக்கும். அதை சற்று மசித்து கொடுக்க வேண்டும்.

பாரம்பரியமான ஸ்வீட் சாப்பிட ஆசையா? வாங்க தஞ்சாவூர் ஸ்பெஷல் அசோகா அல்வா ட்ரை பண்ணலாம்!

இந்த மசியலுக்கு இப்பொழுது தாளிப்பு தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய 10 பல் வெள்ளை பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், ஒருதேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதை சூட்டோடு கடலை பருப்பு மசியலுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் கடலைப்பருப்பு சப்ஜி தயார்.

இந்த சப்ஜியை இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சூடான சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.