விட்டமின் சி சத்து நிறைந்த பெரிய நெல்லிக்காய் சாதம்! அசத்தலான ரெசிபி இதோ.

விலை மலிவாக கிடைக்கும் பெரிய நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கண் பார்வை அதிகரிக்க, இரத்தத்தை சுத்தப்படுத்த, நம் சருமம் பளபளப்பாக இருக்க பெரிய நெல்லிக்காய் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பெரிய நெல்லிக்காய் மிகச்சிறந்த அருமருந்தாக பயன்பட்டு வருகிறது. மேலும் இந்த நெல்லிக்காயை நாம் தினமும் சாப்பிட்டு வரும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நெல்லிக்காய் வைத்து அசத்தலான ஒரு சாதம் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுத்து மகிழலாம் வாங்க.

முதலில் நெல்லிக்காய் சாதம் செய்வதற்கு ஒரு கப் நெல்லிக் காயை நன்கு கழுவி சுத்தம் செய்து கேரட் துருவுவது போல் துருவி எடுத்துக் கொள்ளவும். அதே நேரத்தில் தேவையான அளவு சாதத்தை முக்கால் பாகம் வேகவைத்து எடுத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு சிறிய துண்டு இஞ்சி நன்கு இடித்து சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி நன்கு எண்ணெயுடன் சேர்த்து வதங்கியதும் இரண்டு பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இப்பொழுது தீயை மிதமாக வைத்து ஒரு கப் துருவிய பெரிய நெல்லிக்காய் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். துருவிய நெல்லிக்காயை எண்ணெயுடன் சேர்ந்து நன்கு வதக்க வேண்டும்.

நெல்லிக்காய் பாதி வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது அரை டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து நெல்லிக்காயை வேக வைக்க வேண்டும்.
மூன்று முதல் ஐந்து நிமிடத்தில் நெல்லிக்காய் நன்கு வெந்துவிடும். அதன் பின் அரைக்கப் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

ஒரு நிமிடம் கழித்து வடித்த சாதத்தை இதில் சேர்த்து கலந்தால் சுவையான பெரிய நெல்லிக்காய் சாதம் தயார். பார்ப்பதற்கு எலுமிச்சை பழ சாதம் போலவே இருக்கும் இந்த பெரிய நெல்லிக்காய் சாதம் சாப்பிடுவதற்கு சற்று சுவை மாறுதலாகவும் அதிக சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.