வெஜ் பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளில் ஒன்று. வீட்டில் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் விதமாக முதலில் விரும்புவது பிரியாணி வகைதான். அதிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு வெஜ் பிரியாணி தான் பிடித்தமான உணவாக இருக்கும். இந்த வெஜ் பிரியாணி சாப்பிட ரெஸ்டாரன்ட் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, அதே சுவையில் நம் வீட்டிலேயே செய்து உறவினர்களை மகிழ்விக்கலாம் வாங்க!
பிரியாணி செய்வதற்கு முதலில் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு முதலில் ஒரு கடாயில் இரண்டு தேர்க்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு பச்சை மிளகாய், 4 காய்ந்த வத்தல், இரண்டு தேக்கரண்டி தனியா, ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பழுத்த தக்காளி பழம், 10 பல் வெள்ளை பூண்டு இவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வதக்கி இந்த பொருட்களை நன்கு சூடு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிரியாணி செய்வதற்கு தேவையான பாஸ்மதி அரிசியை அரை மணி நேரத்திற்கு முன்பாகவே ஊறவைத்துக் கொள்ளவும். பிரியாணி செய்வதற்கு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய், இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், பிரியாணி இலை,கல்பாசி சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் போன்றவை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் வெஜிடபிள் பிரியாணிக்கு நாம் தேவையான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு என தேவையான காய்கறிகளை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
காய்கறிகள் எண்ணையுடன் சேர்ந்து பாதி அளவு வெந்து வரும் நேரத்தில் பிரியாணி மசாலா ஒன்றரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, மிளகாய் தூள் அரை தேக்கரண்டி, மல்லித்தூள் அரை தேக்கரண்டி, நாம் அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளவும். ஒரு கப் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும்.
ஹோட்டல் ஸ்டைல் மிளகு நண்டு பிரட்டல்! காரசாரமான ரெசிபி இதோ!
இப்பொழுது பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் கலந்து கொடுத்து ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற வீதத்தில் தண்ணீர் மற்றும் அரிசியை நாம் சேர்த்து கலக்க வேண்டும். அதன் பின் மிதமான தீயில் மூன்று விசில்கள் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.
இப்பொழுது இந்த பிரியாணியை குக்கரின் அழுத்தம் குறைந்தவுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி கொடுத்து பரிமாறினால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.