கீரை பிடிக்காது என சொல்பவர்களுக்கு கூட இந்த பாலக் கீரையை வைத்து அருமையான பாலக் பன்னீர் செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் சுவையில் மயங்கி விடுவார்கள். ரெஸ்டாரன்ட் சுவையில் பாலக்கீரை நம் வீட்டிலேயே செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ…
முதலில் இரண்டு கப் பாலக்கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொதிக்கும் வெந்நீரில் சேர்த்துக் கொள்ளவும். இந்த பாலக்கீரை வெந்நீரில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை வந்தால் போதுமானது அதன் பின் வடிகட்டி கீரையை நன்கு குளிர்ந்த நீர் உள்ள பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் நன்கு குளிர்ச்சியாக இருக்க வேண்டும். இதில் நன்கு வேகவைத்த பாலக்கீரை தொடர்ந்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை இருந்தால் போதுமானது..
அதன் பின் நன்கு குளிர்ந்த பாலக்கீரை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் நான்கு பச்சை மிளகாய், ஒரு பெரிய துண்டு இஞ்சி, 10 பல் வெள்ளைப் பூண்டு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும். பன்னீர் பொன்னிறமாக வரும் வரை இரண்டு புறமும் நன்கு பொரித்தெடுக்க வேண்டும். அப்படி பொறித்து எடுத்த பன்னீரை ஒரு தட்டிற்கு மாற்றி வைத்து விடலாம்
கடாயில் மீதம் இருக்கும் அதே எண்ணெயில் இரண்டு பிரியாணி இலை, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம், 2 பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிரியாணி சாப்பிட ஆசையா? வாங்க பிரியாணி மாதிரியே எம்டி குஸ்கா வீட்டிலேயே செய்யலாம்!
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய ஒரு தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் பாலக்கீரை விழுதுகளை அதனுடன் சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது ஒரு தேக்கரண்டி உப்பு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து இந்த கலவையை குறைந்தது ஏழு நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
ஏழு நிமிடங்கள் கழித்து ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக நாம் பொரித்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து கிளறினால் சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் தயார்.