மட்டன் சுக்கா சுவையுடன் போட்டி போடும் முட்டை சுக்கா! அசத்தலான ரெசிபி இதோ!

மட்டன், சிக்கன் என வாங்க முடியாத நேரங்களில் சுக்கா சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறதா? வெறும் ஐந்து முட்டை மட்டும் வைத்து மட்டன் சுக்கா சுவையில் முட்டை சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள். முட்டை சுக்கா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..

முதலில் முட்டை சுக்கா செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் ஐந்து முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகு சீரக பொடி, ஒரு தேக்கரண்டி கரம் மசாலா பொடி, அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடலை மாவு சேர்த்து பின் கட்டிகள் இல்லாத வண்ணம் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை எண்ணெய் தடவிய ஒரு பாத்திரத்திற்கு மாற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் நீராவியில் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து முட்டை நன்கு வெந்து உப்பலாக மாறி இருக்கும். இதை தன் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்து பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த தக்காளி பழம் ஒன்றை குடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஹெல்தியாவும் சாப்பிடனும் டேஸ்ட்டாவும் சாப்பிடணுமா? சிறு தானிய வாழைப்பூ அடை!

தக்காளி பழம் நன்கு வதங்கி தோல் பிரிந்து வரும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். இப்பொழுது அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வெங்காயம், தக்காளி வேகும் வரை கலந்து கொடுக்க வேண்டும்.

இப்பொழுது இந்த தொக்கு நன்கு சுண்டி வரும் பொழுது நறுக்கி வைத்திருக்கும் முட்டையை கிளற வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முட்டை சுக்கா தயார்.