பெங்களூர் ஸ்டைல் பிசி பெலே பாத் என சொல்லப்படும் பருப்பு சாதம் மிக எளிமையான உணவுகளில் ஒன்று. அதிகமாக எந்தவிதமான மசாலாக்களும் இல்லாமல் செய்யப்படும் இந்த பருப்பு சாதம் எளிதில் ஜீரணம் ஆகி உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் கொடுக்கிறது.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒரு கப்
துவரம் பருப்பு – அரை கப்
கேரட் – அரை கப்
பீன்ஸ் – அரைக்கப்
உருளைக்கிழங்கு – அரை கப்
கத்திரிக்காய் – 1
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
மல்லி – ஒன்றரை தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி
பட்டை – 3
கிராம்பு – 2
காய்ந்த வத்தல் – 5
கசகசா – அரை தேக்கரண்டி
வெள்ளை எள் – 1 தேக்கரண்டி
தேங்காய் – கைப்பிடி அளவு துருவியது
நல்லெண்ணெய் அல்லது நெய் – மூன்று தேக்கரண்டி
கடுகு – சிறிதளவு
குடைமிளகாய் – அரைக்கப்
தக்காளி – 1
புளி – எலுமிச்சை பழ அளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரின் ஒரு கப் பச்சரிசி மற்றும் அரை கப் துவரம்பருப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கத்திரிக்காய், காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு என காய்கறிகளை சேர்த்துக்கொண்டு சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
மற்றொரு கடாயில் கடலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த வத்தல், மல்லி, மிளகு,சீரகம், பட்டை , கிராம்பு, வெந்தயம் , கசகசா, வெள்ளை எள் இவற்றை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும், இதில் இறுதியாக தேங்காவும் வாசனை வரும் வரை வருத்து எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதுகளாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சூடேற்றவும். இதில் தாளிப்பிற்காக கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். கடுகு நன்கு பொரிந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய், தக்காளி சேர்த்து நன்கு எண்ணெயுடன் வதக்கவும். தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் இந்த கலவையை நாம் குக்கரில் வேகவைத்து இருக்கும் சாதத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.
டீ, காபிக்கு பதிலாக ஹெல்தியான வாழைத்தண்டு,காளான் சூப் குடிக்கலாமா!
இறுதியாக தேவைப்பட்டால் வாசனைக்காக மல்லி இலை, நெய் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நமக்கு சுவையான பெங்களூர் ஸ்டைல் ஒரிஜினல் பிசி பெலே பாத் தயார். இதற்கு உருளைக்கிழங்கு பொரியல் அல்லது அப்பளம் சேர்த்து சாப்பிட்டால் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.