பிரியாணி என்ற சொன்னவுடன் பலருக்கு சாப்பிடும் அளவு மறந்துவிடும். பிரியாணியின் சுவையில் நாம் எத்தனை தட்டுக்கள் சாப்பிடுகிறோம் என்ற அளவே தெரியாமல் சிலர் சாப்பிட்டு விடுகின்றனர். டயட், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் இதனாலேயே பிரியாணியை ஒதுக்கி வைப்பதும் உண்டு. இந்த முறை பிரியாணி எவ்வளவு சாப்பிட்டாலும் சுவையானதாக மட்டுமல்லாமல் சத்து நிறைந்ததாக மாறக்கூடிய அளவிற்கு தரமான பிரியாணி செய்யலாம். வாங்க சம்பா ரவை வைத்து அருமையான பிரியாணி செய்யலாம். அதற்கான ரெசிபி இதோ…
இந்த சம்பா ரவை பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு கப் சம்பா ரவையை தனியாக ஒரு அகலமான தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு ஒரு டம்ளர் மிதமான சூட்டில் வெந்நீர் சேர்த்து தண்ணீர் நன்கு தெளித்து விட வேண்டும். ரவையின் அனைத்து பக்கங்களிலும் தண்ணீர் ஒரு சேர படும் அளவிற்கு தெளித்து நன்கு கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பிரியாணி மசாலாக்கள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதாவது பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், பிரியாணி இலை, அண்ணாச்சி பூ சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
தக்காளிப்பழம் நன்கு வதங்கியதும் ஒன்று ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் இந்த பிரியாணிக்கு தேவையான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். அதாவது கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், நூக்கல், பீன்ஸ் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
காய்கறிகளை எண்ணெயோடு சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி பிரியாணி மசாலா, அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு கப் சம்பா ரவைக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியாக தேவைப்பட்டால் ஒருமுறை உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம். தண்ணீர் நன்கு கொதித்ததும் நான் ஊற வைத்திருக்கும் சம்பா ரவையை கடாயில் சேர்த்து நன்கு கட்டிகள் விழாத வண்ணம் கிளற வேண்டும்.
ஒரு சேர நன்கு கிளறி கொடுத்ததும் மிதமான தீயில் வைத்து கடாயை மூடிவிடலாம்.. ஐந்து முதல் பத்து நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான சம்பா ரவை பிரியாணி தயார். இந்த ரவை பிரியாணியை பரிமாறுவதற்கு முன்பாக அரை தேக்கரண்டி நெய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் தூவி பரிமாறினால் அசல் பிரியாணி தோற்றுவிடும்.
அந்த அளவிற்கு சுவையானதாகவும் சத்து நிறைந்ததாகவும் மாறிவிடும். இந்த பிரியாணி உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும் விரும்பி சாப்பிடலாம். மேலும் சர்க்கரை சத்து அதிகமாக உள்ளவர்கள் இந்த பிரியாணியை சாப்பிடுவதன் மூலம் நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்கலாம். இந்த பிரியாணி உடன் தயிர் வெங்காயம் வைத்து சாப்பிட்டால் போதுமானதாக இருக்கும்.