வளரும் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ளது. இந்த முட்டையை வைத்து எளிமையான முறையில் முட்டை பணியாரம் செய்து கொடுத்து நம் குடும்பத்தினரை மகிழ்விக்கலாம். முட்டை பணியார ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்
அரிசி – அரைக் கப்
பொட்டுக்கடலை – அரைக் கப்
வெங்காயம் – 3
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
சோம்பு – 2 தேக்கரண்டி
மிளகு சீரகப் பொடி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
முட்டை – 5
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி இலை – கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் அடிகனமான பாத்திரத்தில் அரிசியை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸியில் சேர்த்து பரபரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அதை அடுத்து பொட்டுக்கடலையை மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை இவைகளை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையில் தேவைப்பட்டால் வத்தல் பொடி சேர்த்துக் கொள்ளலாம். இதில் நமக்கு தேவையான அளவு முட்டைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின் சோம்புவை பொடியாக மாற்றி இந்த கலவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் தேவையான அளவு சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் கூடுதல் சுவைக்காக மிளகு, சீரக பொடி சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக முட்டை பணியாரம் மாவு தயாராக உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் நெய்வேத்திய பிரசாதம்! வாங்க நம்ம வீட்லையும் ட்ரை பண்ணலாம்..
அடுப்பில் பணியார கல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதில் கலந்து வைத்திருக்கும் மாவை பணியார கல்லினுள் ஊற்ற வேண்டும். மிதமான தீயில் அதை வேக வைக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து பணியாரத்தை மாற்றிப் போட்டு மீண்டும் இதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
இப்பொழுது நமக்கு சத்தான முட்டை பணியாரம் தயார். இந்த முட்டை பணியாரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.