பத்தே நிமிடத்தில் அதிரடி ரவா பாயாசம்! எச்சில் ஊரும் ரெசிபி இதோ….

ரவை வைத்து எப்பொழுதும் கேசரி தான் செய்ய வேண்டுமா? வாங்க அதே ரவை வைத்து பத்தே நிமிடத்தில் தித்திப்பான பாயாசம் செய்யலாம். திடீரென வீட்டிற்கு விருந்தாளிகள் வரும் பொழுது அல்லது மாலை நேரங்களில் இனிப்பாக சாப்பிட தூண்டும் பொழுது இதுபோன்ற ரவா பாயாசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். சுவையில் மெய் மறந்து விடுவீர்கள். இந்த இன்ஸ்டன்ட் ரவா பாயாசம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

முதலில் ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து கைப்பிடி அளவு முந்திரி, கைப்பிடி அளவு திராட்சை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் மீதம் இருக்கும் நெய்யில் ஒரு கப் ரவை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் ரவை நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் என்ற அளவு வீரத்தில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

மிதமான தீயில் இந்த கலவையை தொடர்ந்து 3 நிமிடங்கள் கலக்க வேண்டும். இப்பொழுது ரவை நன்கு வெந்து தண்ணீர் வற்றி இருக்கும். இந்த நேரத்தில் ஒரு கப் ரவைக்கு மூன்று கப் பால் என்ற வீதத்தில் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

பால் பாயாசம் சுவையில் அட்டகாசமான பாதாம் பிசின் பாயாசம்!

ரவையுடன் பால் சேர்ந்து நன்கு கொதிக்கும் பொழுது ஒரு கப் ரவைக்கு முக்கால் கப் சர்க்கரை என்ற வீதத்தில் சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம். சர்க்கரை நன்கு கரைந்து ரவையுடன் சேர்ந்து நல்ல கெட்டி பதத்திற்கு வரும். அப்பொழுது அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி கொடுக்க வேண்டும்.
இறுதியாக நாம் முதலில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை பழங்களை சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான ரவா பாயாசம் தயார்.