திடீரென ஏற்படும் சளி தொல்லை, உடல் வலி பிரச்சனையா? மருத்துவ குணம் நிறைந்த சுவையான மிளகு சாதம் ரெசிபி இதோ!

திடீரென ஏற்படும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பலருக்கு எதிர்பாராத சமயங்களில் சளி, தடுமல், காய்ச்சல், உடல் அசதி, , உடல் பலகீனம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நேரங்களில் சுக்கு, மிளகு சேர்த்து காப்பி அல்லது குழம்பு வைத்து சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எளிமையான முறையில் மிளகு சாதம் செய்து கொடுத்து பாருங்கள். சாப்பிட பிடிக்காத சமயங்களில் காரசாரமாக இந்த மிளகு சாதம் உடலுக்கு நல்ல பலனை கொடுத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். மருத்துவ குணம் நிறைந்த மிளகு சாதம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் ஐந்து முந்திரி பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளலாம்.

நாம் சேர்த்த பருப்புகள் அனைத்தும் பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டாக கீரிய மூன்று பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் சாதத்திற்கு தேவையான உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

வெங்காயம் நிறம் மாறியதும் 15 பல் அளவு வெள்ளை பூண்டுவை நன்கு தட்டி கடாயில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளைப்பூண்டு நன்கு வெந்து வரும் நேரத்தில் ஒன்றரை தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புரட்டாசியில் இட்லி, கறி குழம்பு சாப்பிட முடியவில்லை என வருத்தப்படுபவர்களுக்கு கறி குழம்பின் அதே சுவையில் அருமையான வெஜிடபிள் கிரேவி.. ரெசிபி இதோ!

மிளகுத்தூள் சேர்த்த பிறகு மீண்டும் ஒரு நிமிடம் வரை நன்கு வதக்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் வடித்து ஆற வைத்திருக்கும் சாதத்தை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் சேர்த்த பிறகு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி நன்கு கிளறி இறக்கினால் சுவையான மிளகு சாதம் தயார். இந்த சாதத்துடன் உருளைக்கிழங்கு வறுவல் அப்பளம் வைத்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.

உடல் பலவீனமாக வலியுடன் இருப்பதை உணர்பவர்களுக்கு இந்த சாதம் எளிமையாக ஜீரணம் அடைந்து உடல் புத்துணர்ச்சியை கொடுத்து மீண்டும் பழைய நிலைக்கு நம்மை மாற்றிவிடும்.