சைவ பிரியர்களுக்கு காளான் எப்பொழுதும் தலைசிறந்த உணவுதான். இந்த காளான் வைத்து காளான் பிரியாணி, காளான் 65, காளான் கிரேவி என விதவிதமாக சமைத்து ஒரே நேரத்தில் சாப்பிட்டுவிடலாம். ஆனால் இந்த முறை நாம் செய்யும் கிரேவி ஒரே நேரத்திற்கு மட்டுமில்லாமல் மூன்று நேரம் கூட வைத்து சாப்பிடலாம். அதாவது சாதம் , தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் பொருந்தும் விதத்தில் காளான் வைத்து அருமையான காளான் முட்டை கிரேவி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் ஒரு அடி கனமான அகலமான கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
நாம் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் சிறிதளவு சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது மீண்டும் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு காளான் எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் நாம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுது, ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது, ஒரு குழி கரண்டி தயிர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். மீண்டும் இதனுடன் தேவையான மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இதற்காக ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு கலந்து சிறிது நேரம் ஓரமாக வைக்க வேண்டும்.
இப்பொழுது வெங்காயம் வதக்கிய அதே கடாயில் மீண்டும் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை ஒன்று, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மசாலா தடவி ஊற வைத்திருக்கும் காளான் கலவையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
அரிசியை விட எட்டு மடங்கு இரும்பு சத்து நிறைந்த கம்பு வைத்து தித்திப்பான கருப்பட்டி அல்வா ரெசிபி!
எண்ணெயோடு காளான் ஒரு சேர்ந்து வரும் வரை நன்கு பிரட்டி கொடுக்க வேண்டும். அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். ஐந்து முதல் பத்து நிமிடம் கழித்து மீண்டும் ஒருமுறை கிளறி கொடுத்து இதில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை உடைத்து சேர்த்து பிரட்டி இறக்கினால் சுவையான காளான் முட்டை தொக்கு தயார்.