கொளுத்தும் வெயிலுக்கு நம் உடல் சூட்டை குறைக்க தயிர் சாதம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. தயிரில் உள்ள குளிர்ச்சி நம் உடல் உஷ்ணத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லது. இந்த தயிர் சாதத்தை சாதம் இல்லாமல் அவல் வைத்து சற்று வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
அவல் – இரண்டு கப்
தயிர் – ஒரு கப்
காய்ச்சியப் பால் – ஒரு கப்
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி – சிறிய துண்டு
கருவேப்பிலை மற்றும் மல்லி இலை – கைப்பிடி அளவு
மாதுளை பழம் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை
முதலில் இரண்டு கப் அவலை நன்கு கழுவி சுத்தம் செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரை நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும். அதில் தயிர் மற்றும் பால், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் தாளிப்பிற்காக கடுகு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி, பெருங்காயத் தூள், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பஞ்சாபி ஸ்டைல் டேஸ்டான ராஜ்மா மசாலா.. சாப்பிட ஆசையா? அப்போ ரெசிபி இதோ!
இந்த தாளிப்பை அவல் கலவையுடன் சேர்த்து கலக்கவும். இப்பொழுது உறித்து வைத்திருக்கும் மாதுளை சுலைகள், வாசனைக்காக மல்லி இலைகள் சேர்த்து கலந்து கொள்ளலாம். சுவையான அவல் தயிர் சாதம் தயார். சாதம் இல்லாத பொழுது பத்தே நிமிடத்தில் இந்த தயிர் சாதத்தை செய்து முடித்து விடலாம், சுவையும் அருமையாக இருக்கும்.