கோவைக்காய் பொதுவாக கசப்புத் தன்மை கொண்டதாக இருப்பதால் பலர் இந்த காயை விரும்புவதில்லை. ஆனால் இன்சுலின் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவக்காயை வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கோவகாயை அதன் கசப்புத்தன்மை தெரியாத வகையில் புதுவிதமாக கூட்டு வைத்து சாப்பிடலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
கோவக்காய் – ஒரு கப்
நீர்மோர் – தேவையான அளவு
பாசிப்பருப்பு – ஒரு கப்
வெள்ளை பூண்டு – பத்து பல்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
தேங்காய் – கால் கப்
வெங்காயம் – 2
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
வத்தல் – 2
கறிவேப்பிலை – கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கோவக்காய் கழுவி சுத்தம் செய்து நீள நீளமாக நறுக்கி நீர் மோரினில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு புறம் ஒரு குக்கரில் பாசிப்பருப்பு நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் இரண்டு கப் தண்ணீர், வெள்ளை பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு விசில்கள் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிப்பிற்காக கடுகு, கருவேப்பிலை சேர்க்கவும். கடுகு நன்கு பொறிந்ததும் அதில் கடலைப்பருப்பு, காய்ந்த வத்தல், சிறிதளவு சீரகம் சேர்த்து வதக்கி கொள்ளவும். அதன்பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் கோவக்காய்களை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும்.
அதன்பின் நாம் வேக வைத்திருக்கும் பருப்பை இதில் சேர்த்துக் கொள்ளலாம். சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கோவக்காய் வேகும் வரை மூடி வைக்க வேண்டும். மிதமான தீயில் கோவக்காய் வெந்து வர வேண்டும்.
கோவக்காய் நன்கு வெந்ததும் அதில் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு மிக்ஸி ஜாரில் துருவி வைத்திருக்கும் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், வெள்ளை பூண்டு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த தேங்காய் விழுதுகளை பருப்புடன் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது நமக்கு சுவையான கோவக்காய் பருப்பு கூட்டு தயார். இதை நாம் வெறும் சாதத்துடன் அல்லது இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.