நார்ச்சத்து அதிகமாக உள்ள கருப்பு கவுனி அரிசியை நாம் அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்து வருவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து குழந்தைகளின் ஆற்றல் அதிகரிக்கும். நீண்ட நேரத்திற்கு குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன் புத்தி கூர்மையாக வளர்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது.. பாரம்பரியமிக்க இந்த அரிசி வகையை வைத்து விதவிதமான பலகாரங்கள் செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம் வாங்க. இந்த முறை கருப்பு கவனி அவல் வைத்து குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பான பொங்கல் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த ரெசிபி செய்வதற்கு முதலில் இரண்டு கப் அவல் எடுத்து கொள்ள வேண்டும். அதை மூன்று முறை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம். அவலில் இருந்து தண்ணீரை நன்கு பிரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய முந்திரி 10, பாதாம் 10 சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 10 காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.
வறுத்த பொருட்களை ஒரு அகலமான கட்டிற்கு மாற்றி வைத்து விடவும். அடுத்ததாக அதே கடாயில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் அவலைசேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
மிதமான தீயில் நன்கு வதக்கிக் கொள்ளலாம். இரண்டு நிமிடம் கழித்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அவலை வேக வைக்க வேண்டும். இந்த நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் வெல்லம் சேர்த்து அதற்கு அரை தண்ணீர் கலந்து வெல்லப்பாகு தயார் செய்ய வேண்டும்.
இந்த வெல்லப்பாகுவை நன்கு வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அவல் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் இதில் கெட்டியாக ஒரு டம்ளர் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய்ப்பால் சேர்க்கும் பொழுது சுவை சற்று கூடுதலாகவே இருக்கும்.
பால் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த நேரத்தில் விருப்பம் இருந்தால் அரை கப் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பால் சேர்க்கும் பட்சத்தில் தேங்காய் துருவல் தேவைப்படாது. பசும்பால் சேர்த்தால் மட்டும் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது அவல் நன்கு வெந்திருப்பதை உறுதி செய்து நம் தயார் செய்து வைத்திருக்கும் வெல்லப்பாகை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெல்லப்பாகுடன் சேர்த்து அவலை நன்கு கிளற வேண்டும். இந்த நேரத்தில் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் பாதாம் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் அரை தேக்கரண்டி நெய், கால் தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கருப்பு கவுனி அவல் பாயாசம் தயார். இந்த பாயாசம் சத்து நிறைந்ததாக மட்டுமின்றி குழந்தைகளுக்கு பிடித்தமான வண்ணத்திலும் இனிப்பு சுவையிலும் இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள்.