கோடையை முன்னிட்டு தொடங்கிய மாம்பழ சீசனின் காரணமாக எங்கு பார்த்தாலும் மாங்காயும் மாம்பழங்களும் குவியத் துவங்கியுள்ளது. பல வகையான மாம்பழங்கள் அதன் சுவையிலும் நிறத்திலும் தனித்து விளங்குகிறது. மாம்பழங்களை பழமாக சாப்பிடுவது ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கு முன்னதாகவே கிடைக்கும் மாங்காய் வைத்து பல ரெசிபிகள் அடுத்தடுத்து செய்து வருகிறோம். அந்த வகையில் இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் அடைந்த சேலத்து மாங்காய் கறி செய்வதற்கான ரெசிபி இதோ….
ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி உளுந்து, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மல்லி, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் சேர்த்த பொருட்கள் பொன்னிறமாக மாறியதும் நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், அரைக்கப் தேங்காய் துருவல், காரத்திற்கு ஏற்ப மூன்று காய்ந்த வத்தல் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வதக்கிய இந்த பொருட்கள் சூடு தணித்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் அரை தேக்கரண்டி உளுந்து, கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
கருவேப்பிலை நன்கு பொரிந்ததும் 10 முதல் 15 சின்ன வெங்காயம், நன்கு பழுத்த பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
மஞ்சள் தூளின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதுவை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் மாங்காய் துண்டுகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம். மாங்காய் சேர்த்து பிறகு குழம்பு 5 நிமிடம் கொதித்தால் போதுமானது. சூடான சாதத்திற்கு இந்த சேலத்து மாங்காய் கறி பக்காவான பொருத்தமாக இருக்கும்.