கிராமத்து ஸ்டைல் காரசாரமான பொரிச்ச உருண்டை குழம்பு! அருமையான ரெசிபி இதோ!

வீடுகளில் காய்கறிகள் பற்றாக்குறையாக இருக்கும் நேரங்களில் இந்த உருண்டை குழம்பு மிக உறுதுணையாக இருக்கும். சுவையான மற்றும் சத்து நிறைந்த இந்த பொரிச்ச உருண்டை குழம்பு ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 100 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 5
சோம்பு – 2 தேக்கரண்டி
பெருங்காய பொடி – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை மற்றும் மல்லி இலை – கைப்பிடி அளவு
வெங்காயம் – 2
இஞ்சி – சிறிய துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
தக்காளி – 3
புளி -எலுமிச்சை பழ அளவு
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த்தூள் – இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் – ஒன்றை தேக்கரண்டி
தேங்காய் – அரை கப்
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் உருண்டை குழம்பு செய்வதற்கு தேவையான கடலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த வத்தல் இவற்றை அரை மணி நேரத்திற்கு முன்பாக ஊறவைத்து விட வேண்டும். ஊறவைத்த இந்த பொருட்களை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பரபரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த இந்த விழுதுகளில் கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயகாப்பொடி, ஒரு தேக்கரண்டி சோம்பு, விழுதுகளாக அரைத்த இஞ்சி, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அதை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளலாம். ஒருகடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதன் பின் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி, பூண்டுகளை சேர்த்து நன்கு வதங்க வேண்டும். வெங்காயம் தக்காளி நன்கு மையாக வதங்கியதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் புளி கரைசலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது குழம்பிற்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லித்தூள் உப்பு என அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மூடி போட்டு கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் கழித்து தேங்காய் மற்றும் சோம்பு அரைத்து குழம்பினுள் சேர்க்க வேண்டும். இதை ஒரு முறை கிளறி கொடுத்து மீண்டும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

அஜீரணம் மற்றும் வாய்வு தொல்லையா? பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் ஓட பூண்டு சாதம் ரெசிபி இதோ!

அந்த நேரத்தில் நாம் உருண்டைகளாக பிடித்து வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ளலாம். பொன்முறுவலாக பொறிக்க வேண்டிய அவசியம் இல்லை. குழம்பு தயாரானதும் நாம் பொரித்து வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை சேர்த்து ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். இறுதியாக மல்லி இலை தூவி இறக்கினால் நமக்கு சுவையான கிராமத்து ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு தயார்.