கறுக்கு முறுக்கு என இருக்கும் காரா பூந்தி வைத்துக் கூட குருமா செய்யலாமா? வாயை பிளக்க வைக்கும் அசத்தல் ரெசிபி இதோ…

நம் வீடுகளில் காலை மாலை வேலைகளில் டீ காபி போன்ற பானங்கள் குடிக்கும் பொழுது ஸ்நாக்ஸ் இருக்கு பக்கோடா, மிச்சர், காராபூந்தி, வடை போன்ற பலகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது வழக்கம். அதே நேரத்தில் அந்தப் பொருட்கள் வைத்து குழம்பு வைத்து அசத்துவதும் நம் தாய்மார்களின் கைவண்ணம். இதிலும் பலருக்கு பக்கோடா சேர்த்து குழம்பு வைப்பது கைவந்த கலை. ஆனால் பலருக்கு தெரியாது கறுக்கு முறுக்கு என முறுமுறுப்பாக இருக்கும் காராபூந்தி வைத்து கூட அருமையான குருமா ஒன்று செய்யலாம் என்று. காராபூந்தி குருமா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஒன்று, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2 சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக இரண்டு பச்சை மிளகாய் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

பச்சை மிளகாய் வதங்கும் நேரத்தில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் பொழுது 5 பல் வெள்ளைப் பூண்டுவை தட்டி சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு ஒரு சேர வதங்க வேண்டும்.

அடுத்ததாக நன்கு பழுக்க இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயத்துடன் சேர்ந்து தக்காளி பழம் நன்கு குழைந்து வதங்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கும் பொழுது மட்டுமே நமக்கு வெங்காய மற்றும் தக்காளி சேர்ந்து குறைவாக கிடைக்கும்.
தக்காளி நன்கு வதங்கியதும் குருமாவிற்கு தேவையான அளவு ஒரு தேக்கரண்டி கல்லுப்பு, இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம்.

சம்சாவின் அதே சுவையில் சத்து நிறைந்த பச்சை பட்டாணி சேர்த்த கச்சோரி! ஒரு முறை இந்த ஸ்னாக்ஸ் வீட்டில் ட்ரை பண்ணி பார்க்கலாம் வாங்க…

இப்பொழுது மசாலாவை அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

தேங்காய்ப்பால் சேர்த்து பிறகு ஒரு கொதி வரும் நேரத்தில் ஒரு கப் காராபூந்தி சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான காராபூந்தி குருமா தயார். ஐந்தே நிமிடத்தில் குருமாவில் காராபூந்தி நன்கு ஊறி சாப்பிடும் பக்குவத்திற்கு வந்து விடும். சூடான சாதத்தில் இந்த குழம்பு சேர்த்து நன்கு பிசைந்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.

Exit mobile version