ஒரே நேரத்தில் சாம்பார், குருமாவும் சாப்பிட தோன்றும்போது இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க! அசத்தல் சுவையை தரும் ரெசிபி இது!

கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று கும்பகோணம் கடப்பா. சாம்பார் மற்றும் குருமாவின் சுவைக்கு மத்தியில் இருக்கும் இந்த கும்பகோண கடப்பா பலரின் விருப்பமான உணவு வகைகளில் ஒன்று. இந்த கும்பகோணம் கடப்பாவை நம் வீட்டில் ஒரு முறையாவது செய்து பார்த்து வீட்டில் உள்ளவர்களை மகிழ்விக்கலாம் வாங்க.. இந்த ரெசிபி செய்வதற்கான விளக்கம் இதோ…

ஒரு கப் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு உருளைக்கிழங்கு கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கி இரண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு மூன்றும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து இரண்டு விஷல்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு விஷல்கள் வந்ததும் அழுத்தம் குறைந்த பின் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை தனியாக எடுத்து வைத்துவிட்டு பருப்பை மட்டும் நன்கு மசித்து கொள்ளலாம். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி என்னை சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, அரை தேக்கரண்டி கடுகு, அரைத்தக்கரண்டி சீரகம், 2 பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு தக்காளி பழம் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

தக்காளி நன்கு வதங்கி மசிந்தவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை பிசைந்து கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரின் ஒரு கைப்பிடி அளவு தேங்காய், ஒரு கைப்பிடி அளவு பொரிகடலை, 5 பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு சிறிய துண்டி இஞ்சி, அரை தேக்கரண்டி கசகசா, இரண்டு மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆடி வெள்ளிக்கு பாரம்பரியமான இனிப்பு வகை செய்ய ஆசையா! ஒரு முறை இந்த இனிப்பை ட்ரை பண்ணி பாருங்க…

அரைத்த மசாலாவை கடாயில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மிதமான தீயில் இந்த கலவையை கொதிக்க விட வேண்டும்.

ஐந்து முதல் பத்து நிமிடத்தில் நன்கு கொதித்ததும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கைப்பிடி அளவு மல்லி இலைகளை சேர்த்து கிளற வேண்டும். மேலும் ஒரு இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான கும்பகோணம் கடப்பா தயார். சூடான இட்லி, , தோசை, சப்பாத்தி, இடியாப்பம் , ஆப்பம் என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.