குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு சீஸ் உருண்டை. எப்போதும் ஒரே உருளைக்கிழங்கு சீஸ் உருண்டை சாப்பிட்டு சலிப்பு ஏற்படும் நேரங்களில் சற்று வித்தியாசமாக சுவையான மற்றும் சத்து நிறைந்த சோயா வைத்து அருமையான சீஸ் உருண்டை செய்து சாப்பிடலாம் வாங்க.. இந்த சோயா சீஸ் உருண்டை செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….
சோயா சீஸ் உருண்டை செய்வதற்கு முதலில் ஒரு கப் சோயாவை கொதிக்கும் வெந்நீரில் சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். இந்த வெந்நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளலாம்.
10 நிமிடம் கழித்து நன்கு ஊறி இருக்கும் சோயாவை தண்ணீரிலிருந்து பிழிந்து தனியாக எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்பொழுது இந்தச் சோயாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளலாம். அதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு சேக்கரண்டி மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சோயா விழுதுவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் நான்கு தேக்கரண்டி பிரட் கிரம்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்தச் சோயா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். அதன் நடுவில் முஸரல்லா சீஸ் சிறு துண்டு வைத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
உருண்டைகளை ஒரு ஓரமாக வைத்துவிட வேண்டும். அடுத்து ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு அல்லது மைதா மாவை சிறிதளவு தண்ணீர் சேர்ந்து மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மற்றொரு தட்டில் இரண்டு தேக்கரண்டி பிரட் கிரம்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் உருட்டி வைத்திருக்கும் சோயா உருண்டைகளை முதலில் கோதுமை மாவு கரைசலில் சேர்த்து திரட்டி அதன் பின் பிரட் கிரம்ஸ் சேர்த்து திரட்டி தயார் செய்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் பொறித்தெடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் சோயா உருண்டைகளை சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும். பொன்னிறமாக வரும்வரை மிதமான தீயில் பொறித்து எடுத்தால் சுவையான சோயா சீஸ் உருண்டை தயார். பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மட்டும் பிடித்தமானதாக இருக்கும்.