உடல் அசதி, கை கால் வலி அனைத்திற்கும் ஒரே தீர்வு! வாரத்திற்கு ஒரு முறை இந்த மருந்து குழம்பு செய்து பாருங்க!

வாரம் முழுக்க தொடர்ந்து வேலை பார்த்து வரும் அனைவருக்கும் சில நேரங்களில் உடல் அசதி, கை கால் வலி, சோர்வு என அனைத்தும் ஏற்படும். அந்த நேரத்தில் நல்ல உணவு மற்றும் உறக்கம் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிடுகிறது. அப்படி அசதியில் இருக்கும் பலருக்கு இந்த மருந்து குழம்பு அருமருந்தாக மாறும். மருந்து குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

முதலில் ஒரு கடாயில் கண்டன் திப்பிலி, அரிசி திப்பிலி, சுக்கு, சிறிதளவு பரங்கி சக்கை, வசம்பு , ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி ஓமம், காரத்திற்கு ஏற்ப நான்கு முதல் ஐந்து வத்தல் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த இந்த பொருட்கள் சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியை காற்று செல்லாத ஒரு கண்ணாடி பாத்திரத்திற்கு மாற்றி பல நாட்கள் வரை பதப்படுத்திக் கொள்ளலாம். குழம்பு வைக்க தேவைப்படும் பொழுது மீண்டும் உபயோகிக்க முடியும்.

அடுத்ததாக ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். சீரகம் நன்கு பொரி ஒரு கைப்பிடி அளவு தோல் உரித்த வெள்ளைப் பூண்டு, 15 முதல் 20 சின்ன வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப்பழம் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி பழம் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி நாம் வறுத்து அரைத்த மருந்து பொடி சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். இப்பொழுது குழம்பிற்கு தேவையான உப்பு சேர்த்து மீண்டும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த குழம்பு செய்வதற்கு புளி கண்டிப்பாக சேர்க்கவேண்டும். இயல்பாக நாம் வத்த குழம்பு, காரக்குழம்பு செய்வதற்கு எவ்வளவு புளி சேர்த்துக் கொள்வோமோ அதே அளவு இந்த குழம்பு செய்வதற்கும் புளி கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய எலுமிச்சை பல அளவு புளியை நன்கு கரைத்து அதன் தண்ணீரை இதில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மிதமான தீயில் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.

மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் கோவில் பிரசாத தேங்காய் சாதம்! அருமையான ரெசிபி இதோ..

15 நிமிடங்கள் கழித்து கடாயில் ஓரங்களில் எண்ணெய் புரிந்து வந்தால் குழம்பு தயாராக மாறிவிட்டது. இப்பொழுது சிறிதளவு வெல்லம் மற்றும் கைப்பிடி அளவு கருவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான மருந்து குழம்பு தயார். மருந்து குழம்பு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.