பள்ளி விடுமுறை நாட்களில் மாலை வேலைகளில் நம் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அசத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அந்த ஸ்நாக்ஸ் ஹெல்தியாகவும் குழந்தைகளுக்கு பிடித்த விதத்திலும் அமைய வேண்டும். அந்த வகையில் வீட்டில் உள்ள அனைத்து காய்கறிகளையும் வைத்து அசத்தலான போண்டா செய்யலாம் வாங்க. இந்த போண்டா டீக்கடை சுவையில் இருந்தாலும் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்வதால் ஹெல்த்தியானதாகவும் இருக்கும்.
இந்த வெஜிடபிள் போண்டா செய்வதற்கு முதலில் ஒரு குக்கரில் பொடியாக நறுக்கிய இரண்டு கேரட், இரண்டு குடைமிளகாய், இரண்டு கப் காலிஃப்ளவர் சேர்த்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அதே குக்கரில் 3 முதல் 4 உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு தோல் உரித்து ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி நன்கு மசித்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பச்சை மிளகாய், ஒரு பெரிய துண்டு இஞ்சி 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து விழுதுகளாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் நாம் வேகவைத்து வைத்திருக்கும் காய்கறிகள், மிக்ஸியில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
இந்த கலவையுடன் கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சிலரினால் போண்டாவிற்கு உள்ளே வைப்பதற்கான பூரணம் தயார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பு!
இப்பொழுது வெளியே உள்ள மாவு தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு இரண்டு கப், அரிசி மாவு அரைக்கப், பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி, மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக சேர்த்தால் போண்டா பதத்திற்கு வராது.
முதலில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை கடலை மாவுடன் நன்கு முக்கி சூடான எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும். நன்கு இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூடான வெஜிடபிள் போண்டா தயார்.