கிச்சடி என சொன்னவுடன் பலருக்கு மனதில் தோன்றுவது ரவா கிச்சடி தான். ரவா கிச்சடியை மிஞ்சும் சுவையில் அம்மாவின் கைப்பக்குவத்தில் அரிசி கிச்சடி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள். கிச்சடி பிடிக்காதவர்கள் கூட வேண்டும் வேண்டும் என மீண்டும் வாங்கி சாப்பிடும் சுவையில் அசத்தலாக இருக்கும். இந்த ரெசிபி செய்வதற்கான எளிமையான விளக்கம் இதோ!
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அரிசி, 3 தேக்கரண்டி துவரம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் இந்த பொருட்களை மையாக அரைக்காமல் ரவை பதத்திற்கு அரைத்துக் கொண்டால் போதுமானது.
அடுத்ததாக ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய்,இரண்டு கிராம்பு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம்,கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக 10 பல் வெள்ளைப் பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வளர்க்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் கிச்சடிக்கு தேவையான பொடியாக நறுக்கிய ஒரு உருளைக்கிழங்கு, ஒரு கேரட், ஒரு கப் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு எண்ணெயுடன் வதக்க வேண்டும்.
காய்கறிகள் பாதி வந்ததும் ஒரு சிறிய தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் பாதி வந்ததும் மூன்று கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு, தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு ஏற்ற ஒரே சைடிஷ்! வெஜிடபிள் சால்னா! அருமையான ரெசிபி!
தண்ணீர் நன்கு கொதித்து காய்கள் வெந்து வரும் நேரத்தில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் அரிசி பருப்பு பொடி சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். அப்படியே மிதமான தீயில் ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான அரிசி கிச்சடி தயார். இந்த கிச்சடிக்கு கெட்டியான தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை மிகச்சிறப்பாக இருக்கும்.