காரசாரமாக, புளிப்பாக சாப்பிட தோன்றும் நேரங்களில் நம் மனதில் முதலில் நினைவிற்கு வருவது புளிக்குழம்பு மட்டும் தான். அந்த புளிக்குழம்பு எப்பொழுதும் போல அல்லாமல் வறுத்து அரைத்து செய்யும் பொழுது சுவை மேலும் கூடுதலாக சிறப்பாக இருக்கும். இந்த குழம்பு இரண்டு மூன்று நாட்களுக்கும் கெட்டுப் போகாமலும் அப்படியே இருக்கும். வெண்டைக்காய் வைத்து வறுத்து அரைத்த புளிக்குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!
இந்தப் புளிக்குழம்பு செய்வதற்கு முதலில் மசாலாக்களை வறுத்து அரைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஆறு காய்ந்த வத்தல் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். அடுத்ததாக ஒன்றரை தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒன்றரை தேக்கரண்டி அரிசி, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
கடாயில் சேர்த்து இருக்கும் அரிசி பொரிந்து வரும் நேரம் 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பாதி அளவு வதங்கியதும் 5 பல் வெள்ளை பூண்டு, , கால் கப் தேங்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய இந்த பொருட்களை பத்து முதல் 15 நிமிடம் சூடு ஆற வைத்து அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஹெல்தியாவும் சாப்பிடனும் டேஸ்ட்டாவும் சாப்பிடணுமா? சிறு தானிய வாழைப்பூ அடை!
அடுத்ததாக சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இது முதல் 15 வெண்டைக்காய்களை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெண்டைக்காய் நன்கு வதங்கி வாசனை வரும் வரை வருத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அதே கடாயில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, கால் தேக்கரண்டி வெந்தயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 3 காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
தக்காளி பழம் நன்கு வதங்கியதும் நாம் முன்னதாக வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து ஒரு முறை வதக்க வேண்டும். இப்பொழுது நாம் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதுவை இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு பாதி எலுமிச்சை பல அளவு புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மிதமான தீயில் இந்த குழம்புவை 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கும் பொழுது கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் குழம்பு தயாராக மாறிவிட்டது. சூடான சாதத்துடன் இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு அப்பளம் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.