அசைவ விருந்து என்றாலே தலைக்கறிக்கு தனி இடம்தான்! காரசாரமான மட்டன் தலைக்கறி பிரட்டல்! ரெசிபி இதோ…..

அசைவ விருந்து என்றாலே பலரும் எதிர்பார்ப்பது மட்டன் வைத்து வகை வகையாக சாப்பிட வேண்டும் என்றுதான். அதிலும் தலைக்கறி பிரட்டல் என்றால் பலரின் கவனத்தை ஈர்க்கும் ரெசிபிகளில் ஒன்று. எளிமையான முறையில் சுவையான மட்டன் தலைக்கறி பிரட்டல் செய்வதற்கான ரெசிபி இதோ…

பொதுவாக மட்டன் தலைக்கறியில் சில நேரங்களில் புழு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால் கறியை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு ஒன்றுக்கு இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நன்கு கழிவு சுத்தம் செய்த மட்டன் கறியை கொதிக்கும் தண்ணீரில் ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்து கறியை ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு தண்ணீர் கலந்து குக்கரை மூடிவிட வேண்டும். மிதமான தீயில் 8 முதல் 10 விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.


அந்த நேரத்தில் இப்பொழுது மசாலா தயார் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு அண்ணாச்சி பூ, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த இந்த பொருட்கள் சூடு தணிந்ததும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு பிரியாணி இலை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு கப் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் தேவைப்பட்டால் அரை கப் பெரிய வெங்காயம், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்..

ஆடி வெள்ளிக்கு பாரம்பரியமான இனிப்பு வகை செய்ய ஆசையா! ஒரு முறை இந்த இனிப்பை ட்ரை பண்ணி பாருங்க…

தக்காளி பழம் நன்கு வதங்கியதும் நாம் வேகவைத்த மட்டன் கறி, ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், நாம் வறுத்து தயார் செய்து வைத்திருக்கும் மசாலா இரண்டு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல்,ஒரு தேக்கரண்டி கசகசா, சரியான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


இந்த தேங்காய் விழுதையும் கடாயுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் மட்டன் தலைக்கறி கிரேவி தயார். சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது விருந்து சாப்பிட்ட திருப்தி எளிமையாக கிடைத்துவிடும்.