கிராமத்து ஸ்டைலில் ஆவி பறக்க மட்டன் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க!

மட்டன் குழம்பு அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு இதனை பலரும் பல விதமாக சமைப்பர். இதில் பயன்படுத்தக்கூடிய மசாலாக்கள் செய்யும் முறைகள் என பலருக்கும் வேறுபடும். கிராமங்களில் பெரும்பாலும் மட்டன் குழம்பு வைப்பதற்கு தேவையான மசாலா பொருட்கள் அப்பொழுதே வறுத்து அம்மியில் அரைத்து பயன்படுத்துவார்கள். மேலும் கிராமங்களில் மண் பாத்திரங்களை கொண்டு செய்யப்படும் இந்த மட்டன் குழம்பானது கூடுதல் சுவையாக இருக்கும். கிராமத்து ஸ்டைலில் ஆவி பறக்க அட்டகாசமான இந்த மட்டன் குழம்பை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இரத்த சோகையை விரட்டியடிக்கும் ஆட்டின் ஈரலை வைத்து அருமையான ஈரல் வறுவல்!

மட்டன் குழம்பு செய்வதற்கு தேவையான மசாலாவை முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். அதற்கு ஒரு மண் பாத்திரத்தில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் நான்கு ஸ்பூன் அளவிற்கு முழு கொத்தமல்லி விதைகள், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 12 வரமிளகாய்களை இதனுடன் சேர்த்து வறுக்கவும். இவை அனைத்தும் நன்கு சிவக்க வறுத்த பிறகு இதனை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். இப்பொழுது இதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஆறு சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு, இரண்டு துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இவை மென்மையாகும் வரை வதக்கி இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விடவும்.

இப்பொழுது வறுத்த மசாலாக்களை அரைத்து பிறகு அதனுடன் வதக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளவும். கூடுமானவரை அம்மி இருந்தால் அதில் தண்ணீர் தெளித்து மைய அரைக்கவும். கிராமத்து சமையல் என்றாலே மிக்ஸியில் அரைப்பதை விட அம்மியில் அரைப்பது சிறந்தது. அம்மியில் அரைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைக்கலாம்.

இப்பொழுது ஒரு மண் சட்டியில் மூன்று மேசை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதனுடன் மூன்று ஏலக்காய், 2 பட்டை, நான்கு கிராம்பு, ஒரு பிரியாணி இலை, மூன்று அன்னாசிப்பூ, சிறிதளவு கல்பாசி ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதனை தாளித்த பிறகு 15 சின்ன வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும். இதனுடன் ஆறு பல் பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி விடவும். நன்கு பழுத்த மூன்று பெரிய தக்காளிகளை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும். பிறகு தேவையான அளவு கல் உப்பு மற்றும் ஒன்றரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

500 கிராம் அளவிற்கு ஆட்டுக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். கறியை ஓரளவு வதக்கிய பின்னர் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை சேர்த்து கிளறவும். இறுதியாக தேவையான அளவு தண்ணீர் விட்டு இதனை மூடி போட்டு வேக வைக்க வேண்டும். மட்டன் நன்கு வெந்த பின்னர் கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.

கிராமத்து மணம் வீசும் முருங்கைக்காய் போட்ட குடல் கறி குழம்பு…!

இந்த கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு இட்லி, சப்பாத்தி, தோசை, சாதம் என அனைத்து உணவுகளுக்கும் அட்டகாசமாக இருக்கும்….!

Exit mobile version