இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு வழக்கமாக செய்யும் சட்னி வகைகள் உங்களுக்கு அலுத்துவிட்டது ஏதாவது வித்தியாசமாக முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் இதோ உங்களுக்காக தான் இந்த ரெசிபி. காய்கறிகள் அதிகம் தேவைப்படாத தக்காளி, வெங்காயம் போன்ற குறைவான காய்கறிகளை வைத்து அட்டகாசமான தக்காளி குருமாவை செய்து அசத்தங்கள். இந்த தக்காளி குருமா இட்லி, தோசை, சப்பாத்தி புலாவ் என அனைத்து வகையான உணவு வகைகளுக்கும் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் ஹோட்டல் சுவையில் இந்த தக்காளி குருமாவை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தக்காளி குருமா செய்வதற்கு முதலில் இதற்கான மசாலாவை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் அளவிற்கு தேங்காய் துருவலை சேர்க்கவும். இதனுடன் இரண்டு பச்சை மிளகாய்களை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, ஒரு சிறிய துண்டு பட்டை, 2 ஏலக்காய் 2 கிராம்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் சிறிதளவு சேர்த்து இதனை மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் சீரகம், ஒரு பிரியாணி இலை, ஒரு சிறிய துண்டு பட்டை, சிறிதளவு கல்பாசி ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கும் பொழுது இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதையும் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நறுக்கி வைத்திருக்கும் ஐந்து தக்காளி சேர்த்து அதையும் நன்கு வதக்கவும் தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
இப்பொழுது அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டரை ஸ்பூன் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும் இவை நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இதனை 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். 10 நிமிடங்கள் கொதித்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் விழுதையும் சேர்த்து கொதிக்க விடவும். அனைத்தும் சேர்ந்து மீண்டும் பத்து நிமிடங்கள் கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான தக்காளி குருமா தயார்.