திருப்பதி லட்டின் சுவையிலேயே சூப்பரான லட்டை இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்திடுங்க…!

லட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பதி தான். திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டின் சுவைக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. அந்த அளவிற்கு திருப்பதி லட்டு சுவை நிறைந்ததாக இருக்கும். திருப்பதி லட்டு போன்ற சுவையிலேயே நாமும் வீட்டிலே லட்டு செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த தீபாவளிக்கு திருப்பதி லட்டின் சுவையிலேயே அட்டகாசமாக லட்டு செய்து அனைவரையும் அசத்திடுங்கள். வாருங்கள் திருப்பதி லட்டு சுவையில் எப்படி லட்டு செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தீபாவளிக்கு வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் பேக்கரி சுவையில் அட்டகாசமான மினி ஜாங்கிரி..

இந்த லட்டு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரை கப் அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை கப் அரிசி மாவை சேர்க்கவும். பிறகு ஒரு கப் அளவு காய்ச்சி ஆற வைத்த கெட்டியான பாலை சேர்க்க வேண்டும். இவற்றை கட்டிகள் ஏதும் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். கட்டிகள் இல்லாமல் கரைத்த பிறகு இதனுடன் இரண்டு கப் அளவிற்கு கடலை மாவை சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கடலை மாவையும் கட்டிகள் இன்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை தோசை மாவை விட சற்று தண்ணீராக இருக்க வேண்டும். நீங்கள் கலக்கும் பொழுது கெட்டியாக இருந்தால் கூடுதலாக பால் அல்லது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். இவற்றை நன்றாக கலந்த பிறகு அரை மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவு சர்க்கரை சேர்த்து அதில் கால் கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து பாகாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை பாகாக காய்ச்சி இறக்கி விடலாம். பிறகு ஒரு கடாயில் பூந்தி பொரிக்க தேவையான அளவு நெய் சேர்க்கவும். நெய் உருகி சூடானதும் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை பூந்தி கரடியில் சேர்த்து நெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு அனைத்தையும் பூந்தியாக பொரித்து எடுக்கவும். நல்ல பொன்னிறமாகும் படி பொறித்து எடுத்து இதனை சர்க்கரை பாரில் சேர்க்கவும். சர்க்கரைப்பாகில் பூந்தி அனைத்தையும் சேர்த்த பிறகு இதனை ஆற வைக்கவும். இது முழுமையாக ஆறக்கூடாது சற்று வெதுவெதுப்பாக இருக்கும்படி ஆற வைத்துக் கொள்ளவும்.

பூந்தி ஓரளவு ஆறியதும் இதில் பாதி அளவு பூந்தியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அப்பொழுதுதான் இந்த பூந்தியை லட்டாக பிடிக்க முடியும். இப்பொழுது அரைத்த மாவை பூந்தியுடன் சேர்த்துக் கொள்ளவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து ஒரு கைப்பிடி அளவு முந்திரியை வறுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ஒரு கைப்பிடி அளவு உலர் திராட்சையையும் வறுக்கவும். திராட்சை நெய்யில் நன்கு பொரிந்து உப்பி வந்ததும் இவை இரண்டையும் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் பூந்தியுடன் சேர்க்க வேண்டும். 4 ஏலக்காய்களை தட்டி சேர்க்கவும். சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும் அனைத்தையும் கலந்த பிறகு இதனை சிறு சிறு உருண்டைகளாக இறுக்கமாக பிடித்து வைக்கவும்.

அவ்வளவுதான் திருப்பதி லட்டு போன்ற சுவையிலேயே லட்டு தயாராகி விட்டது.