கிராமத்து முறையில் சத்துக்கள் நிறைந்த சுவையான கத்தரிக்காய் தட்டைப் பயறு குழம்பு!

பெரும்பயறு, காராமணி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தட்டை பயறு உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய பயறு வகைகளில் ஒன்று. தட்டைப் பயிறு குறைந்த அளவு கொழுப்பு உடைய ஒரு உணவு பொருளாகும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அடிக்கடி தட்டைப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், மக்னீசியம் நிறைந்த ஒரு உணவு பொருளாகும். உடலுக்குத் தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்கி உடலை நல்ல இயக்கத்தோடு வைத்திருக்க இந்த தட்டைப்பயறு உதவுகிறது. இந்தத் தட்டைப்பயறைக் கொண்டு சுவையான கத்தரிக்காய் தட்டை பயிறு குழம்பு கிராமத்து முறையில் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கிராமத்து சுவையில் ஊரே மணக்கும் கருவாட்டுக் குழம்பு! ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

கால் கப் அளவு தட்டை பயறை தண்ணீரில் அலசி 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த தட்டைப்பயிறை உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ள வேண்டும். கைகளால் அழுத்தினால் அமுங்கும் அளவிற்கு வேக வைக்கவும். குக்கரில் வேக வைத்தால் மூன்று விசில் வரும் வரை வேக வைக்கலாம். வேக வைத்த தண்ணீரை வீணாக்கி விட வேண்டாம் அதனை குழம்பிற்கு பயன்படுத்தலாம்.

ஒரு மண் பாத்திரத்தில் பெரிய நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து கால் கப் தண்ணீரில் நன்கு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு நன்கு பழுத்த ஒரு பெரிய தக்காளியை மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். 10 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இதனுடன் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான அளவு கல் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பெரிய கத்தரிக்காய் நீளவாக்கில் அரிந்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே வேக வைத்திருக்கும் தட்டைப் பயறையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் நன்கு கரைத்த பிறகு அடுப்பில் வைத்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இப்பொழுது மூன்று பல் பூண்டு, இரண்டு மேசை கரண்டி தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த இந்த தேங்காய் விழுதை இப்பொழுது குழம்போடு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இவை நன்கு கொதித்து குழம்பு வற்றிய பிறகு இறக்கி விடலாம். இப்பொழுது ஒரு தாளிக்கும் கரண்டியில் நல்லெண்ணெய் சேர்த்து அதனோடு அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளித்து இதனை குழம்போடு சேர்த்து கொள்ள வேண்டும்.

கிராமத்து ஸ்டைலில் வீடே மணக்கும் மீன் குழம்பு…! மீன் குழம்பு அடுத்த முறை இப்படி செய்ய மறக்காதீர்கள்!

அவ்வளவுதான் சத்துக்கள் நிறைந்த சுவையான கத்தரிக்காய் தட்டை பயிறு குழம்பு தயார்!