ராகி உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய ஒரு உணவு பொருள். ராகியில் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் ராகியால் செய்யப்படும் உணவுப் பொருட்கள் ருசியாக இருக்காது என்று இல்லை. ராகியில் செய்யும் உணவுகள் சுவையிலும் அட்டகாசமாக இருக்கும். அதுபோல ராகி வைத்து செய்யக்கூடிய ஒரு சுவை நிறைந்த ஒரு ரெசிபி தான் ராகி அல்வா. வாருங்கள் வாயில் வைத்ததும் கரையும் இந்த ராகி அல்வாவை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ராகி அல்வா செய்வதற்கு முதலில் ஒரு பேனில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் உருகியதும் இதில் பத்து முந்திரி பருப்புகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். முந்திரி பருப்புகளை நெய்யில் வறுத்து தனியாக வைத்து விடவும். இப்பொழுது அதே பேனில் முக்கால் கப் அளவிற்கு ராகி மாவு மற்றும் கால் கப் அளவிற்கு கோதுமை மாவு ஆகிய இரண்டையும் சேர்த்துக் கொள்ளவும். இவை இரண்டையும் அதே நெய்யில் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதனை வறுத்து எடுத்த பிறகு வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம்.
இவ்வளவு டேஸ்டியான கோதுமை அல்வாவா… இதை செஞ்சு பாருங்க இனி கடைகளில் அல்வா வாங்க மாட்டீங்க…!
இப்பொழுது ஒரு கப் அளவிற்கு வெல்லத்தை துருவி எடுத்துக் கொள்ளவும். இந்த வெல்லத்தோடு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை கரைத்த பிறகு இதனை வடிகட்டி நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட வேண்டும். மாவு கட்டிப்படாத வண்ணம் வெல்லப்பாகை ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது பானில் நாம் கரைத்த மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறி கொள்ள வேண்டும். மிதமான தீயில் வைத்து இதனை கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா கொஞ்சம் இறுக ஆரம்பிக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளற வேண்டும். அல்வா கைகளில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை இதனை கிளறிக் கொண்டே இருக்கவும். இறுதியாக நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரிகளை தூவி இறக்கி விடலாம். இதனை அப்படியே பரிமாறலாம் அல்லது இன்னும் சிறிது நேரம் கிளறி தட்டில் ஆற வைத்து துண்டுகளாக வெட்டியும் பரிமாறலாம்.
அவ்வளவுதான் சுவை நிறைந்த வாயில் வைத்ததும் கரையும் ராகி அல்வா தயார்!