மகாளய அமாவாசை அன்று சைட் டிஷ் புடலங்காய் கூட்டு இப்படி செய்து பாருங்கள்!

மகாளய அமாவாசை புரட்டாசி மாதத்தின் பொழுது வரும் அமாவாசையை குறிப்பதாகும். இந்த அமாவாசை அன்று முன்னோர்களுக்கு சைவ உணவுகள் படைத்து வழிபாடு நடத்துவார்கள். சாம்பார், குழம்பு வகைகளுடன் கூட்டு, பொரியல்களும் செய்வது வழக்கம். அப்படி கூட்டு செய்வதற்கு புடலங்காய் வைத்து அருமையான இந்த புடலங்காய் கூட்டு செய்து பாருங்கள்.

புடலங்காய் கூட்டு செய்வதற்கு முதலில் கால் கப் அளவிற்கு பாசிப்பருப்பை கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு நடுத்தரமான புடலங்காயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். 15 சின்ன வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். இவை அனைத்தையும் எப்பொழுதும் ஒன்றாக வேக வைக்க வேண்டும். இவற்றை வேக வைக்கும் பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் ஒன்றரை ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

புடலங்காய் பாசிப்பருப்போடு சேர்ந்து நன்றாக வெந்ததும் இப்பொழுது தனியாக ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் சீரகம், உளுத்தம் பருப்பு, கடுகு, ஒரு வரமிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதனை தாளித்ததும் வெந்த புடலங்காயுடன் சேர்க்கவும். இறுதியாக ஒரு மேஜை கரண்டி அளவு துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இதனை இறக்கிவிடலாம். அவ்வளவுதான் சுவையான புடலங்காய் கூட்டு தயாராகி விட்டது.

இதே கூட்டை வேறொரு முறையிலும் செய்யலாம். புடலங்காய் மற்றும் பாசிப்பருப்பு வேகும் பொழுது இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வேகவைத்தும் செய்யலாம். தேங்காய் பூவோடு இரண்டு பச்சை மிளகாய் மற்றும் இரண்டு ஸ்பூன் சீரகமும் சேர்த்து அரைத்து இந்த விழுதை கூட்டோடு சேர்த்து தாளித்தும் செய்யலாம்.