முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒரு பழம் ஆகும். காரணம் இந்த பலாப்பழத்தின் சுவை. பலாப்பழத்தை எப்படி சுவைத்து சாப்பிடுகிறோமோ அதே போல் அந்த பலாக்காயை வைத்து பல சுவையான ரெசிபிகளை செய்ய முடியும். பெரும்பாலும் இதை சமைப்பது கடினம் என்று நினைத்து சமைக்க மாட்டார்கள். ஆனால் இந்த பலாக்காயை வைத்து செய்யும் கூட்டானது செய்வதற்கு எளிமையானது மட்டும் இன்றி மிக மிக சுவையானதும் கூட.
மணம் நிறைந்த தேங்காய் சாதம்.. அட்டகாசமான சுவையில் இப்படி செய்யுங்கள்!
இந்த பலாக்காய் கூட்டு செய்வதற்கு ஒரு நடுத்தரமான பலாக்காயை பாதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 15 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து ஒன்று இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அரை கப் அளவு துவரம் பருப்பை சரியான அளவு தண்ணீர் விட்டு குழைத்து விடாமல் குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பலாக்காயை சேர்க்க வேண்டும். பிறகு வெங்காயத்தையும் அதில் சேர்த்து வேக வைக்க வேண்டும். இவை இரண்டும் வெந்த பிறகு ஒன்றரை ஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். அதன் பிறகு வேகவைத்து எடுத்த துவரம் பருப்பை சேர்க்க வேண்டும்.
இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கால் ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும் இவற்றை தாளித்த பிறகு ஏற்கனவே வேக வைத்திருக்கும் பலாக்காயோடு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியாக தேங்காய்ப்பூ போட்டு இறக்கி விடலாம்.
அவ்வளவுதான் சுவையான பலாக்காய் கூட்டு தயார்!