உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு வகையாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கில் என்ன செய்து கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். பொரியல், குருமா, சிப்ஸ், பொடி மாஸ் என உருளைக்கிழங்கை வைத்து பலவிதமான ரெசிபிகளை அட்டகாசமாக செய்யலாம். நீங்கள் வழக்கமாக உருளைக்கிழங்கு வைத்து செய்யும் பொரியலை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பலமுறை இந்த பொரியல் உங்கள் வீட்டில் கட்டாயம் இடம் பிடித்து விடும்.
பார்த்தவுடன் ருசிக்கத் தூண்டும் பலாக்காய் கூட்டு!
இந்த உருளைக்கிழங்கு பொரியல் செய்வதற்கு நான்கு பெரிய உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு நன்கு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்கவும். அதன் பிறகு பத்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் ஓரளவு வதங்கிய பிறகு ஒரு பத்து பூண்டு பல்லை தட்டி இதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயமும் பூண்டும் நன்கு வதங்க வேண்டும். இப்பொழுது ஒரு தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தக்காளி வேண்டாம் என நினைத்தால் விட்டு விடலாம். வாசனைக்காக இரண்டு பச்சை மிளகாய்களை நறுக்காமல் முழுதாக அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, முக்கால் ஸ்பூன் சோம்புத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வாவ்! முட்டையை வைத்து முட்டை பொரியல் ஒரு முறை வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள்!
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். கால் டம்ளர் அளவு தண்ணீர் விட்டு நன்கு கிளறி விடவும். இப்பொழுது வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து சுருள கிளற வேண்டும் உருளைக்கிழங்கில் மசாலாக்கள் முழுமையாக இறங்கிய பிறகு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து இறக்கிவிடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான உருளைக்கிழங்கு பொரியல் தயாராகி விட்டது. இது ரசம் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என அனைத்திற்கும் மிகப் பொருத்தமாக இருக்கும்.