அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும் பிரண்டை சட்னி…!

பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரித்து உடல் ஆரோக்கியத்திலும் நன்மைகள் பல வழங்கக்கூடிய உணவு பொருளாகும். நீர் நிறைந்த பகுதிகளில் காணப்படும் இந்த பிரண்டையை குழம்பு செய்தோ அல்லது சட்னியாகவும் சாப்பிடலாம். இந்த பிரண்டை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. மூளை நரம்பு மண்டலத்தை வலுப்பெற செய்கிறது. வாருங்கள் பிரண்டையை வைத்து எப்படி சுவையான பிரண்டை சட்னி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

முதலில் 150 கிராம் அளவிற்கு பிரண்டையை எடுத்து அதில் உள்ள நார்களை நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் பிரண்டையை சேர்த்துக் கொள்ள வேண்டும் இந்த பிரண்டையுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். குறைந்தது 4 நிமிடங்கள் வரை இதை வதக்கவும். பிரண்டை எண்ணெயில் வதங்கியதும் இதனை இறக்கி விடலாம்.

இப்பொழுது அதே கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். இவை பாதி வறுப்பட்ட உடனேயே இதனுடன் சிறிதளவு கட்டிப் பெருங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, எட்டு பல் பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும். இவற்றுடன் துண்டாக நறுக்கிய இஞ்சி மற்றும் 1 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். பத்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து அதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

இவை நன்கு வதங்கியதும் இதனுடன் சிறிதளவு புளி, ஒரு கை நிறைய கொத்தமல்லி மற்றும் நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பிரண்டை ஆக்கியவற்றை சேர்த்து கிளற வேண்டும். ஒரு தேங்காய் பத்தையை சிறுசிறு துண்டுகளாக கீறி அதையும் சேர்த்து வதக்கி விட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தும் நன்கு வதங்கியதும் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சட்னி அரைத்து எடுத்தவுடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து அதை சட்னியுடன் சேர்த்து விடவும். அவ்வளவுதான் சுவையான சத்துக்கள் நிறைந்த பிரண்டை சட்னி அட்டகாசமாக தயாராகி விட்டது.