பன்னீர் கட்லட் அருமையான மாலை நேர சிற்றுண்டி வகையாகும். மாலை நேரத்தில் ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் இந்த பன்னீர் கட்லட்டை முயற்சி செய்து பாருங்கள். பன்னீர் சைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு. இதை பொரித்தோ, மசாலா செய்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் சுவை நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் சத்துக்களும் நிறைந்ததாக இருக்கும்.
ஆடி அமாவாசை அன்று வடை, பாயசம் இப்படி செய்து பாருங்கள்…!
பன்னீரில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதம் உள்ளது இதில் உள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவடைய செய்ய உதவி புரிகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் தசைகளை வலுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் பன்னீரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள பொட்டாசியம் நினைவாற்றலை அதிகரிக்க உதவி புரிகிறது. இப்பொழுது இந்த பன்னீரை வைத்து எப்படி பன்னீர் கட்லட் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
பன்னீர் கட்லட் செய்ய இரண்டு பெரிய வெங்காயம், 6 பச்சை மிளகாய், ஒரு குடை மிளகாய், 4 பல் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். 400 கிராம் உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து எடுக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து அதனை உதிரியாக உதிர்த்து வைக்க வேண்டும். இப்பொழுது அரை கிலோ பன்னீரையும் இதே போல் உதிர்த்து வைக்க வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு மேசை கரண்டி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் இரண்டு கிராம்பு, ஒரு பட்டை, ஒரு பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பின் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். குடை மிளகாய் அடுத்ததாக சேர்த்து வதக்கி கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் பின் நாம் வேகவைத்து உதிர்த்து வைத்த உருளைக்கிழங்கையும் உதிர்த்த பன்னீரையும் சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். சிறிதளவு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இந்த பன்னீர் மற்றும் உருளைக்கிழங்கின் மேல் தூவி கிளறி ஆற வைக்க வேண்டும்.
இரண்டு மேஜை கரண்டி கான்பிளவர் மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். மாவு அதிக தண்ணீராக இருக்கக் கூடாது அதே சமயம் மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. 200 கிராம் அளவு ரஸ்க் தூளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் கட்லட் பொறிக்க தேவையான அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
அடடே என்ன சுவை! சுவையான மாலை நேர சிற்றுண்டி மசாலா பணியாரம்…!
எண்ணெய் காய்ந்ததும் ஆற வைத்திருக்கும் பன்னீர் மற்றும் உருளைக்கிழங்கு கலவையை நீளவாக்கிலோ அல்லது உருண்டையாகவோ விரும்பிய வடிவில் உருட்டி அதனை கரைத்து வைத்திருக்கும் கான்பிளார் மாவில் நனைத்து பின்பு ரஸ்க் தூளில் பிரட்டி நான்கு அல்லது ஐந்து கட்லட்டாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். உருண்டைகளை உடனடியாக திருப்பி விடக் கூடாது உடனடியாக திருப்பினால் உதிர்ந்து கொட்டி விடும். எனவே ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வேக வைக்க வேண்டும். இதனை சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறலாம் அவ்வளவுதான் சுவையான சூடான பன்னீர் கட்லெட் தயார்!