நவராத்திரி ஸ்பெஷல் நெய் மணக்கும் சுவையான சர்க்கரை பொங்கல்…!

அனைவருக்கும் பிடித்தமான ஒரு பிரசாதம் என்றால் அது சர்க்கரை பொங்கல். வீட்டில் எந்த ஒரு முக்கிய நிகழ்வு என்றாலும் இறைவனுக்கு சர்க்கரை பொங்கல் செய்து அதை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்வது வழக்கம். சர்க்கரை பொங்கல் வீடுகளில் என்ன தான் சுவையாக செய்தாலும் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் சர்க்கரை பொங்கல் கூடுதல் சுவையோடு இருப்பதை நாம் உணர்ந்திருப்போம். இப்பொழுது கோவில்களில் கிடைக்கும் அதே சுவையில் சர்க்கரை பொங்கல் எப்படி நாம் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கோவில் சுவையில் அருமையான எலுமிச்சை சாதம் இந்த நவராத்திரிக்கு பிரசாதமாக செய்து அசத்துங்கள்!

சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு முதலில் குக்கரில் ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்து நெய் உருகியதும் அதில் அரை கப் அளவு பாசிப்பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கப் பச்சரிசியை இரண்டு முறை தண்ணீரை அலசி தண்ணீரை வடித்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொங்கல் நன்கு குழைவாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். எனவே இதற்கு தண்ணீர் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். அரிசியும் பருப்பும் சேர்த்து ஒன்றரை கப் உள்ளது. இதற்கு நான்கு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் விரும்பாதவர்கள் ஐந்து கப் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். இது நான்கிலிருந்து ஐந்து விசில் வரும் வரை அடுப்பில் வைத்து விடுங்கள்.

இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நெய் உருகியதும் இதில் முந்திரி மற்றும் திராட்சைகளை விருப்பமான அளவில் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரி நிறம் மாறி திராட்சை நன்கு உப்பி வந்ததும் இதனை எடுத்து விடலாம். இதே பாத்திரத்தில் 2 கப் அளவு வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தை நன்கு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் விசில் வந்ததும் அடுப்பை திறந்து கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை வடிகட்டி அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஓரளவு இறுகியதும் வறுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் திராட்சைகளை சேர்த்து மூன்று ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளவும். வாசனைக்கு அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். இப்பொழுது இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் சுவையான நெய் மணக்கும் சர்க்கரை பொங்கல் தயார்…!