உடலுக்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவுப் பொருள்தான் காளான். காளான் கொழுப்புகள் இல்லாத நார்ச்சத்து நிறைந்த உணவு பொருளாகும். காளான் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கெட்ட கொழுப்புகள் நீங்கி உடலில் கொழுப்பின் அளவு சமநிலையில் இருப்பதோடு உடல் எடையை குறைத்திடவும் வழிவகை செய்யும். மேலும் காளான் அதிக அளவு இரும்புச் சத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. ரத்த சோகையை சரி செய்திட இது உதவுகிறது. காளானில் வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. காளானை தொடர்ந்து சாப்பிட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்வளவு சத்துக்கள் நிறைந்த காளானை வைத்து பலவிதமான சுவையான ரெசிபிகளை செய்யலாம். இப்பொழுது இந்த காளான் வைத்து சுவையான காளான் பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
உங்க குழந்தைங்க லஞ்ச் பாக்ஸுக்கு தக்காளி சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!
காளான் பிரியாணி செய்ய ஒரு கப் பாஸ்மதி அரிசியை 30 நிமிடங்கள் முன்னதாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று வெங்காயம், மூன்று தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். காளானை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது பிரியாணிக்கான மசாலா விழுது அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு மேஜை கரண்டி துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில் இரண்டு மேசை கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு மேசை கரண்டி நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு துண்டு பட்டை, மூன்று கிராம்பு, 3 ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, இரண்டு அன்னாசி பூ ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நல்ல பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பெரிய துண்டுகளாக நறுக்கிய காளானை சேர்த்து நன்கு வதக்கி கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து அதையும் நன்கு வதக்க வேண்டும். இப்பொழுது ஊற வைத்திருக்கும் அரிசியையும் சேர்த்து கிளறவும். அரிசியை மெதுவாக கிளறினால் போதும் உடைத்து விடக்கூடாது. ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
குக்கரை மூடி இதில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். குக்கரில் விசில் வந்ததும் இதனை அப்படியே எடுத்து தனியாக வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான சூடான காளான் பிரியாணி தயாராக இருக்கும். இதனை வெங்காய ரைத்தாவுடன் பரிமாறலாம்.
மணம் நிறைந்த தேங்காய் சாதம்.. அட்டகாசமான சுவையில் இப்படி செய்யுங்கள்!
அவ்வளவுதான் சுவையான மஷ்ரூம் பிரியாணி தயார்!!!