பாட்டியின் கைப்பக்குவத்தில் செய்யும் குழம்புக்கு என்றைக்குமே தனி ருசி உண்டு. சூடான சாதத்தில் பாட்டியின் கை பக்குவத்தில் செய்த குழம்பை சுட சுட ஊற்றி பிசைந்து சாப்பிடும் பொழுது கிடைக்கக்கூடிய திருப்தி அலாதியானது. அப்படி பாட்டியின் கை பக்குவத்தில் செய்தது போன்ற சுவையில் இந்த மொச்சைக்கொட்டை காரக்குழம்பு செய்து பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த காரக் குழம்பு இரண்டு நாள் வரை வைத்து சாப்பிட்டாலும் அலுத்து போகாது.
ஒருமுறை வத்தல் குழம்பு செட்டிநாட்டு முறையில் இப்படி வைத்துப் பாருங்கள்!
மொச்சைக்கொட்டை காரக்குழம்பு செய்வதற்கு முதலில் கால் கப் அளவு மொச்சை கொட்டையை 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஊற வைத்திருக்க வேண்டும். மொச்சைக்கொட்டை ஊறவைத்து வேக வைக்கும் பொழுது சீக்கிரம் வெந்துவிடும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைத்திருக்கும் மொச்சை கொட்டையை உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். மொச்சைக்கொட்டை கைகளால் அழுத்தம் பொழுது அமுங்கும் அளவிற்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். குக்கரில் வேக வைப்பது என்றால் ஐந்து விசில் வரை விட்டு வேக வைக்கலாம். மொச்சை கொட்டையை வேகவைத்த பிறகு அதில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டாம். இதை குழம்பிற்கு பயன்படுத்தி குழம்பு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
பிறகு மூன்று ஸ்பூன் அளவிற்கு தேங்காய் துருவலை எண்ணெயில் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தின் சூட்டில் சிறிது நேரம் வதக்கிக் கொள்ளவும். இவற்றை வதக்கிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கியதை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு மண் பாத்திரத்தில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சோம்பு, 1/4 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இருபத்தைந்து சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். 20 பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இரண்டும் நன்கு வதங்கிய பிறகு இரண்டு பழுத்த தக்காளிகளை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது கால் கிலோ அளவு கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி இதனுடன் சேர்க்கவும். ஒரு முருங்கை காயையும் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை சேர்த்த பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து மொச்சை கொட்டையில் உள்ள தண்ணீர் இருந்தால் அதை ஊற்றலாம் இல்லையேல் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு நெல்லிக்காய் அளவு புளியினை கரைத்து இதனுடன் ஊற்றி கொதிக்க விட வேண்டும். காய்கறிகள் முக்கால் சதவீதத்திற்கு மேல் வெந்த பிறகு ஏற்கனவே வேக வைத்திருக்கும் மொச்சைக் கொட்டையை சேர்த்து தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் விழுதையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்த பிறகு இறுதியாக கொத்தமல்லி இலை தூவி மேலே இரண்டு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி விடலாம்.
கமகமக்கும் முருங்கைக்காய் சாம்பார்…! முருங்கைக்காய் சாம்பார் செய்வது இவ்வளவு சுலபமா?
அவ்வளவுதான் பாட்டி கை பக்குவத்தில் செய்தது போல மனமணக்கம் மொச்சைக்கொட்டை காரக்குழம்பு தயார்.