அடடே என்ன சுவை! சுவையான மாலை நேர சிற்றுண்டி மசாலா பணியாரம்…!

மாலை நேரம் வந்து விட்டாலே பலருக்கும் ஏதாவது ஒரு சிற்றுண்டி கொரிக்க வேண்டும் என்று தோன்றும். பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளில் விற்கப்படும் சிற்றுண்டி வகைகளை விட வீட்டிலேயே செய்து உண்ணும் சிற்றுண்டிகள் பலருக்கு பிடித்தமானது மட்டுமின்றி உடல் நலத்திற்கும் ஆரோக்கியமானது.

அப்படி வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை தான் மசாலா பணியாரம் இதனை செட்டிநாட்டுப் பகுதிகளில் மசாலை சியம் என்று சொல்லுவார்கள். வாருங்கள் இந்த மசாலா பணியாரம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மசாலா பணியாரம் அல்லது மசாலை சீயம்:

ஒரு ஆழாக்கு அரிசி மற்றும் முக்கால் ஆழாக்கு உளுந்தம் பருப்பை ஒன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும். ஒரு மேஜை கரண்டி ஜவ்வரிசி ஊற வைக்கவும்.

இப்பொழுது ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தை கிரைண்டரில் கெட்டியாக ஆட்டவும். அதிக தண்ணீர் சேர்க்காமல் லேசாக தண்ணீர் தெளித்து ஆட்ட வேண்டும்.

ஊற வைத்த ஜவ்வரிசியை இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து ஆட்ட வேண்டும். பணியாரத்திற்கு தேவையான மாவு தயார்.

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை காய வைக்க வேண்டும். இதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் ஆகியவற்றை தாளித்து சிறிதளவு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் இதனை மாவில் கொட்டி தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து பிசைந்து வைத்த மாவு கலவையை உருண்டையாக பிடித்து எண்ணெயில் போட்டு நன்கு சிவக்கும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்.

ஜவ்வரிசி சேர்ப்பதால் மாவு நன்கு மொறுமொறுப்பாகவும் சிவந்தும் வரும்.

அவ்வளவுதான் சுவையான மசாலா சீயம் தயார்…!