கொள்ளு ரசம் இப்படி வச்சு பாருங்க.. கொழுப்பு கரைந்து ஓடிடும்!

பூண்டு, மிளகு, சீரகம், புளி இவைதான் ரசத்தின் அடிப்படை மூலப் பொருட்கள். இவை அனைத்தும் சேர்ந்து நமக்கு செரிமான சக்தியை அளிப்பதால் தான் உணவின் இறுதியில் கொஞ்சமாக ரசத்தை ஊற்றி சாப்பிட்டு விடுவார்கள். இந்த ரசத்தை பல விதமாக செய்யலாம். ஒவ்வொரு ரசத்திற்கும் ஒரு தனித்துவமான சுவை, நன்மைகள் உண்டு. அதேபோல் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து சளி, இருமல், தொந்தரவுகளை விரட்டி அடிக்கும் ஒரு வகை ரசம் தான் கொள்ளு ரசம். வழக்கமாய் செய்யும் ரசம் போல் இல்லாமல் இந்த கொள்ளு ரசத்தை இப்படி வித்தியாசமாக வைத்துப் பாருங்கள். சுவையும் மணமும் அலாதியாக இருக்கும்.

கொழுப்பை கரைக்கும் கொள்ளு வைத்து அருமையான கொள்ளு துவையல்!

கொள்ளு ரசம் செய்வதற்கு முதலில் 150 கிராம் அளவு கொள்ளை நன்கு கழுவி ஒரு குக்கரில் எடுத்துக் கொள்ளுங்கள். கொள்ளு வேக தேவையான தண்ணீரை விட கூடுதலான தண்ணீரை ஊற்றி குக்கரில் ஐந்து முதல் ஏழு விசில் வரை விடுங்கள். நாம் இங்கு கொள்ளை பயன்படுத்தப் போவதில்லை. வேகவைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த போகிறோம். தண்ணீரை பயன்படுத்தி விட்டு அதில் உள்ள கொள்ளை சுண்டல் போலவோ அல்லது கிரேவியாகவோ செய்து சாப்பிட்டு கொள்ளலாம். நமக்கு இந்த ரசத்திற்கு அதன் தண்ணீர் மட்டுமே போதுமானது. கொள்ளு அதிகம் மசிந்து குழைந்து கரைந்து விடாமல் வெறும் தண்ணீரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். இவை பொறிந்த பிறகு நான்கு வர மிளகாய்களை கிள்ளி சேர்த்துக் கொள்ள வேண்டும். 15 பூண்டு பற்களை இடித்து இதனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பூண்டு வதங்கி நிறம் மாறியதும் ஒரு பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றை நன்கு வதக்கிய பிறகு 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து இதனுடன் ஊற்றி கொதிக்க விடவும்.

இந்த நிலையில் வேகவைத்த கொள்ளு தண்ணீரை ஊற்றவும். ரசத்தை இறுதியில் கொதிக்க விடக் கூடாது. எனவே இப்பொழுதே பச்சை வாசனை போக கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு ஸ்பூன் சீரகத்தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகுத்தூள் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் அட்டகாசமான கொள்ளு ரசம் தயாராகி விட்டது!