சளித்தொல்லைக்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான மருந்து தான் கற்பூரவல்லி. அனைத்து வீடுகளிலும் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு மூலிகை தாவரமாகும். இந்த கற்பூரவல்லி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றம் உடையது. மேலும் சளி தொல்லையிலிருந்து விடுபடவும் உதவி புரிகிறது. வாருங்கள் இந்த கற்பூரவள்ளி வைத்து எப்படி அருமையான ரசம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
கற்பூரவள்ளி ரசம் செய்வதற்கு இடிக்கும் உரலில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் 10 பல் பூண்டு, ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அதையும் நன்கு தட்டி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு மண் பானையில் மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து அதில் 15 கற்பூரவள்ளி இலைகளை சேர்க்கவும். கற்பூரவள்ளி இலைகள் நல்ல கொழுந்து இலைகளாக இருக்கும் படி பார்த்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இதனை 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு இதனை வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
நெஞ்சு சளியை அடியோடு விரட்டும் துளசி ரசம்! இப்படி செய்து பாருங்கள்..
இப்பொழுது அதே மண் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கால் டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்க்கவும். இதனுடன் நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து வதக்கி விடவும். பிறகு இரண்டு பழுத்து தக்காளிகளை பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கி மென்மையான பிறகு அரை கப் அளவிற்கு புளி தண்ணீர் சேர்க்க வேண்டும். பிறகு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கற்பூரவல்லி சாறை சேர்த்து கொள்ள வேண்டும். இதை அதிக நேரம் கொதிக்க விட வேண்டியது இல்லை. லேசாக ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடலாம். அவ்வளவுதான் சுவையான சளி தொல்லையை விரட்ட கூடிய கற்பூரவல்லி ரசம் தயார்!