உங்கள் வீட்டில் தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் செய்ய தொடங்கி விட்டீர்களா? எளிமையாக அதே சமயம் சுவையாக ஏதேனும் இனிப்பு வகை செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த ரவா லட்டு முயற்சி செய்து பாருங்கள். ரவை வைத்து செய்யும் இந்த ரவா லட்டு செய்வது எளிமையானது. சுவையும் அலாதியாக இருக்கும். வாருங்கள் இந்த ரவா லட்டு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ரவா லட்டு செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வானலியில் இந்த ரவையை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். ரவை கரிந்து விடாமல் சிவக்கும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வறுத்த இந்த ரவையை ஆற வைக்கவும். ரவை ஆரிய பிறகு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இப்பொழுது அரை கிலோ அளவு சீனியை அதே மிக்ஸி ஜாரில் சேர்த்து தனியாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு 50 கிராம் அளவு முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது நெய் ஊற்றி நறுக்கிய இந்த முந்திரியை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு தட்டில் அரைத்த ரவை மாவு, சீனி மாவு, வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும். 200 கிராம் அளவு நெய்யை சூடு செய்து கொள்ள வேண்டும். நெய் உருகி வாசனை வந்ததும் அதனை சூடாக நாம் ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் மாவில் ஊற்றி கிளற வேண்டும். இந்த மாவு சூடாக இருக்கும் பொழுதே இதனை உருண்டைகளாக பிடிக்கவும். உங்களுக்கு விரும்பிய அளவில் இதனை உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். முந்திரி மட்டுமின்றி இதில் உங்களுக்கு விருப்பமான நட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
வாயில் வைத்ததும் கரையும் மாவுருண்டை… இந்த தீபாவளிக்கு இப்படி செய்து பாருங்கள்!
அவ்வளவுதான் சுவையான வாசனை நிறைந்த அதே சமயம் எளிமையான ரவா லட்டு தயாராகிவிட்டது…!