தீபாவளி பலகாரத்திற்கு அனைவருக்கும் பிடித்த பாரம்பரியமான அதிரசம்…! இப்படி செய்து தீபாவளியை அசத்துங்கள்!

தீபாவளி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசுகளும் பலகாரங்களும் தான். தீபாவளி வரப்போகிறது என்றாலே வீடுகளில் விதவிதமான பலகாரங்களை செய்ய தொடங்கி விடுவார்கள். பலரும் தீபாவளி பலகாரங்களை ருசிப்பதற்காகவே எப்பொழுது தீபாவளி வரும் என ஆவலுடன் காத்திருப்பார்கள். அப்படி தீபாவளி பலகாரங்களில் அனைவருக்கும் பிடித்த ஒரு பலகாரம் தான் அதிரசம். பெரும்பாலும் சாதாரண நாட்களில் இந்த அதிரசத்தை பலரும் வீடுகளில் முயற்சிப்பதில்லை. தீபாவளி போன்ற சிறப்பான நாட்களில் தான் இந்த அதிரசத்தை செய்து ருசித்து மகிழ்வார்கள். இதுவரை அதிரசம் நீங்கள் செய்ததில்லை என்றால் கவலை வேண்டாம். இப்படி முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் உங்கள் வீட்டு தீபாவளி அன்றும் அட்டகாசமான அதிரசத்தை நீங்கள் செய்ய முடியும்.

கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு பிடித்தமான லட்டு இப்படி செய்யுங்கள்! லட்டு செய்வது எப்படி?

அதிரசத்திற்கு முதலில் பச்சரிசியை எடுத்து அதை சுத்தமாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறவைத்த இந்த அரிசியை மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து வாங்க வேண்டும். இந்த மாவு மிருதுவாக இருக்கக் கூடாது சற்று கொரகொரப்பாக இருக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து தண்ணீர் ஒரு டம்ளர் விட்டு கரைத்து இதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது வடிகட்டிய இந்த வெல்லத்தை அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து பாகாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த பாகு கம்பி பதம் வரும் பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை கட்டிகள் ஏதும் ஏற்படாத வண்ணம் சிறிது சிறிதாக தூவி கிளற வேண்டும். அடுப்பை குறைவான தீயில் கிளறவும். ஏழு ஏலக்காயை தட்டி இந்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும். மாவு முழுவதும் வெல்லத்துடன் கிளறிய பிறகு 100 கிராம் அளவு நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளற வேண்டும். அனைத்தையும் கிளறிய பிறகு சிறிது மாவை கையில் எடுத்து முறுக்கு மாதிரி சுற்றிப் பார்க்கவும் மாவு நன்றாக சுற்ற வந்தால் சரியான பதத்தில் மாவு தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

இப்பொழுது இந்த மாவை இறக்கி வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆற விடவும். இது நன்றாக ஆற வேண்டும் ஆறிய பிறகு இதனை மூடி வைக்க வேண்டும். மறுநாள் ஒரு கடாயில் அதிரசம் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி இலையில் வைத்து தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் திருப்பி விட்டு பொரித்து எடுக்க வேண்டும். இதனை குறைவான தீயில் வைத்து பொரித்து எடுத்து ஆற வைக்கவும். அதிரச மாவு ஒரு வாரம் முதல் வைத்து நாட்கள் வரை வைத்திருந்து சுடலாம். அவ்வளவுதான் சுவையான பாரம்பரியமான அதிரசம் தயார்…!